லைஃப்ல மறக்க மாட்டேன் – கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்துள்ள 23-வது படம் ‘மதராஸி’, பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையை அனிருத் அமைத்துள்ளார்.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை ருக்மினியும் கலந்து கொண்டு படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தனர்.

மாணவர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “மதராஸி சிறப்பாக வந்துள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மற்றும் அனிருத் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். கல்லூரி காலத்தில் கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இன்றும் கல்லூரி நண்பர்களுடன் பயணம் தொடர்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “மனித வாழ்க்கையில் காதல் எவ்வளவு முக்கியமோ, அதே போலவே இந்த படத்திலும் காதலை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

விழா நிகழ்ச்சியில், படத்தின் ஒரு பாடலுக்கு கல்லூரி மாணவர்களுடன் சிவகார்த்திகேயன் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.