‘ரோலக்ஸ்’ யானை பிடிக்கும் முயற்சியில் மருத்துவர் காயம் – நலம் விசாரித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Spread the love

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக “ரோலக்ஸ்” என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சனிக்கிழமை அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றபோது, ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். தற்போது அவர் சாய்பாபா காலனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இன்று மருத்துவமனைக்கு சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டாமுத்தூரில் யானை தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் மருதாச்சலம் என்ற கிராமவாசியும் யானை தாக்குதலில் காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
“இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கும்கி யானைகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் மக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே தாக்கப்படுகிற நிலைமை ஏற்படக்கூடாது. மருத்துவர் விஜயராகவன் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும்” எனவும் கூறினார்.
மேலும் அவர், யானை-மனித மோதலை தடுப்பதற்காக, கர்நாடகத்தில் போல் தடுப்பு வேலிகள் மற்றும் ரயில் பாதைகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியில் அதிகமானோர் வனத்துறையில் நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அது குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொண்டாமுத்தூருக்கு டாப்சிலிப் வனக்குழுவினரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றும், வனத்துறையினருக்கு தேவையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். “யானை-மனித மோதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஒட்டி விரைவில் அதிமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும். ஆனால் அரசு எதையும் கேட்டு செயல்படுவதில்லை” எனவும் விமர்சித்தார்.
ஆக்கிரமிப்புகள் குறித்து எழுந்த கேள்விக்கு, “அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் ஆட்சியில் யானைகள் வருவதை தடுக்க அகழிகள் அமைத்தோம். ஆனால் யானைகள் அதையும் தாண்டி வருவது பிரில்லியண்ட் எனலாம்” என்று பதிலளித்தார்.
இதேவேளை, கோவையில் பாலங்கள், சாலை பணிகள் வேகமாக முடிக்கப்பட வேண்டும் என்றும், யானை தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அரசு மெத்தனமாக நடந்து கொள்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.