கோவை நேரு நகரைச் சேர்ந்த சென்னிமலை (57) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் தனது நிறுவனத்தை விரிவுபடுத்த கோடிக்கணக்கில் நிதி தேவைப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த செந்தில்வாசன் (51) மூலம் முதலீட்டாளர்கள் இருப்பதாக அறிமுகம் ஏற்பட்டது.
செந்தில்வாசன், கண்ணன் என்பவரை அறிமுகப்படுத்தி ரூ.25 கோடி கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறியதாக தெரிகிறது. சில நாட்களில் கண்ணன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கடன் ஒப்புதல் கிடைத்ததாகவும், அதற்கான வரைவோலையை (டி.டி.) காட்டியதாகவும் கூறப்படுகிறது. கமிஷன் தொகை மற்றும் சில ஆவணங்கள் வழங்கினால் உடனே பணம் விடுவிப்பதாக நம்பிக்கை அளித்துள்ளனர்.
இதனை நம்பி சென்னிமலை ரூ.67 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கடன் தொடர்பான பதிவு பொள்ளாச்சி பதிவாளர் அலுவலகத்தில் செய்ய வேண்டும் என கூறி அழைத்தும், பின்னர் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வருமாறு கூறியும் சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது தான் மோசடி செய்யப்பட்டதை சென்னிமலை உணர்ந்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பீளமேடு போலீசார் செந்தில்வாசன், முருகன், அன்புசெல்வன், கதிரேசன், அந்தோணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த மற்றொரு மோசடி வழக்கில் சத்திரிய சான்றோர் படை கட்சி நிறுவனர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், கோவையைச் சேர்ந்த சென்னிமலை என்பவரிடம் “முருகன்” என்ற பெயரில் கடன் வாங்கித் தருவதாக ரூ.67 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பீளமேடு போலீசார் சென்னைக்கு சென்று ஹரி நாடார் மற்றும் சென்னையைச் சேர்ந்த சுந்தரேசன் என்கிற கதிரேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தென்காசியைச் சேர்ந்த அந்தோணி, அன்புசெல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், ஹரி நாடார் மற்றும் கதிரேசனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட்டு அப்துல் ரகுமான் முன்னிலையில் நடந்த விசாரணையில், இருவரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் பாதுகாப்புடன் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply