,

யானைகள், மனித மோதல் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

SPV
Spread the love

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் யானை மனித மோதல் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே .அர்ச்சுணன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த மனுவில், “கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சி, விராலியூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (28.07.2024) மற்றும் இன்று திங்கட்கிழமை (29.07.2024) காலை வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானைகள், ஆக்ரோஷமாக தாக்கியதில், உயிரிழப்பு, பலத்தகாயங்கள் ஏற்படுத்தியும் மற்றும் வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்துள்ளது, இதனால் தொண்டாமுத்தூர் மலையடிவார கிராமங்கள் மட்டுமின்றி, தாளியூர் பேரூராட்சிக்குட்பட குடியிருப்பு பகுதிகள், சுற்றுவட்டார பகுதிகளிலும் சமீப காலமாக யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை பகுதி கிராமங்கள் மற்றும் ஆனைகட்டி, பெரியதாடாகம், கணுவாய், சோமையம்பாளையம், பாலமலை, நாயக்கன்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் பலமுறை ஏற்பட்டும், அடிக்கடி பொது மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதுடன், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் மற்றும் வேளாண் பயிர்களும் பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து யானைகள், மனித மோதல் நிகழாவண்ணம் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.