அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதில், செப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து வாக்காளர்களைத் திசைதிருப்பும் சூழ்நிலை உருவாக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன, ஒரே முகவரியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் கூறினார்.
ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தேர்தல் ஆணையம் அதனை பின்பற்றவில்லை என்று அவர் கண்டித்தார்.
மத்திய அரசின் கொள்கைகள், குறிப்பாக மோடி அரசின் வெளிநாட்டு கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்றும், இதன் விளைவாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடை தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலால் ஏற்றுமதி ஆடைகளுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் மோடியின் நண்பர்களான குஜராத் எண்ணெய் நிறுவனங்களுக்கே பலன் கிடைக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி கூறிய “தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியை விழுங்கிவிட்டது” என்ற கருத்துக்கு பதிலளித்த செல்லக்குமார், “முதலில் அவர் தனது கட்சியைப் பா.ஜ.கவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார். ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க பிராந்தியக் கட்சிகளின் தோளில் ஏறி வளர்ந்துள்ளது என்றும் சாடினார்.
கூட்டணி – சீட் ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு, அதுகுறித்த முடிவுகளை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே எடுக்கும் என்றும், அதிக தொகுதிகள் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை; அது கட்சியின் வளர்ச்சிக்கான இயல்பான செயல் என்றும் விளக்கினார்.
புதிய கட்சிகள் குறித்த கேள்விக்கு, “புதிய கட்சி வந்தால் மக்கள் ஆர்வத்துடன் செல்வது இயல்பு. ஆனால் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் எனக் கருத முடியாது. விஜய் தற்போது வரை நடிகராகவே பார்க்கப்படுகிறார்” என்றார்.
வரவிருக்கும் திருநெல்வேலி மாநாடு, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான முக்கிய கூட்டமாக இருக்கும் என்றும், கூட்டணி மற்றும் சீட் ஒதுக்கீடு குறித்த முடிவுகளை காங்கிரஸ் கமிட்டியே எடுக்கும் என்றும் செல்லக்குமார் தெளிவுபடுத்தினார்.



Leave a Reply