மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

modi
Spread the love

பா.ஜ.க.வின் கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் வசந்த ராஜன், நீலகிரி வேட்பாளர் முருகன் மற்றும் திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார்.

அவர் பேசுகையில், கொங்கு பகுதி, நீலகிரி பாஜகவிற்கு எப்போதுமே சிறப்பானது ஏனென்றால் வாஜ்பாய் காலத்தில் இங்கிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்கிய பகுதி இது என்றார்.

தமிழ் நாடு ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் கொண்ட மாநிலம். கோவை என்பது ஜவுளி தொழில் சிறப்பாக நடந்துகொண்டுள்ள இடம். திமுக அரசு இந்த தொழில் செய்பவர்களை காக்கும் படி செயல்படவேண்டும் ஆனால் அதை முடக்கும் படி மின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி வருகிறது.

அதுவே பாஜக ஆட்சியின் போது கோவையில் ராணுவ தளவாடம் (DefenceCorridor) திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் கோவைக்கு மிகப்பெரும் வளர்ச்சி வரவுள்ளது. இதை செய்ய காங்கிரஸ் கூட்டணி நினைத்து பார்த்திருக்குமா என்பதை மக்கள் நினைத்து பார்க்கவேண்டும்.

கோவை உள்பட தமிழ் நாட்டின் 2 முக்கியமான நகரங்களில் மாதிரி தளவாட பட்டறை பூங்காக்கள் மூலம் தொழில்வளர்ச்சி மிகவும் வேகமாக முன்னேற்ற கூடிய வாய்ப்பை தமிழகத்திற்கு தந்துள்ளது பாஜக அரசு. வந்தே பாரத் எனும் ரயில் சேவைகள் கோவைக்கு 2 வந்துள்ளது. மேலும் தொழில்முன்னேற்றத்திற்காக கோவை – பொள்ளாச்சிக்கு தேசிய விரைவு நெடுஞ்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஜல் ஜீவன் எனும் குடிநீர் திட்டத்தை உருவாக்குகிறது. இதை தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளுக்கு தருகிறோம். ஆனால் திமுக அரசு அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு தருகிறது என்று குற்றம் சாட்டினார். தற்போது, கோவையில் 15 நாட்களுக்கு 1 முறை தான் தண்ணீர் வருகிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது என்றார்.

தமிழகத்தின் வளர்ச்சி மீது திமுக கவனம் செலுத்தியது இல்லை. மூன்றாவது முறை பாஜக ஆட்சிக்கு வரும்போது, கொங்கு மண்டலம் மற்றும் நீலகிரி பகுதிகளின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமாக, விரைவாக  செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறேன், என்றார

பா.ஜ.க.வின் கோவை மற்றும் நீலகிரி வேட்பாளர்கள் அண்ணாமலை, முருகன் மக்களின் குரலை டெல்லியில் கேட்க செய்வார்கள். இவர்களுடன் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வேட்பாளர் முருகானந்தத்தின் வெற்றி  தமிழகத்தின் வளர்ச்சிக்கான புதிய பாதைகளை திறக்கும். இது என் உத்தரவாதம், என்றார்.
முன்னதாக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “தமிழ்நாட்டு மக்களோடு இருப்பதற்காகவும், அவர்களோடு இணைந்து செயல்படுவதற்காகவும் பிரதமர் மோடி வருகிறார். திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை ; தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்க்கிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் திமுகவுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் பிடிப்பது கிடையாது.

தமிழ் மக்களின் ஆசிர்வாதம் பிரதமர் மோடிக்கு தேவை ; தமிழக மக்கள் தங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். இம்முறை திமுகவினர் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலம் வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர். தமிழ் கலாச்சாரத்தை 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் ; தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் மோடி.உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் கலாச்சாரத்தை பண்பாட்டை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஆ.ராசா. அதே வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டவர் கனிமொழி, எனக் கூறினார்.