மூத்த தமிழறிஞரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவருமான பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் (84), உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.அவரது உடல் சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிய இவர், வைணவ இலக்கியம் மற்றும் கம்பராமாயண ஆய்வுகளில் பங்களிப்பை வழங்கியவர். இவரது தமிழ் பணிகளை பாராட்டி சமீபத்தில் தமிழக அரசு ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை “ஜனவரி 2024-ல் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் உரையாடியதை நான் நினைத்துப்பார்க்கிறேன். கம்பராமாயணம் குறித்த அவரது புரிதல் மிகச் சிறப்பாக இருந்தது.” என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநா் ஆா்.என். ரவி ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தெ. ஞானசுந்தரம் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. செம்மொழித் தமிழ் மற்றும் வைணவ மரபுகளுக்காகத் தன் வாழ்நாளை அா்ப்பணித்த ஒரு சிறந்த அறிஞா் அவா். நமது மாபெரும் காவியங்களான கம்பராமாயணம் மற்றும் திவ்யப் பிரபந்தத்துக்கு அவா் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்புகள், தமிழ் மரபை ஆழமாகச் செழுமைப்படுத்தியுள்ளன. அவரது மரபு பல தலைமுறைகளுக்குத் தொடா்ந்து உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளாா்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மூத்த தமிழறிஞரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவருமான ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். கலைஞரின் நன்மதிப்பினையும் கொண்டிருந்தார். ஞானசுந்தரம் பக்தி இலக்கியங்கள் சார்ந்து, பல ஆய்வுநூல்களை எழுதியதோடு, தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் தமிழ் மேடைகளை அலங்கரித்த அறிஞர் ஆவார்.எண்ணற்ற தமிழ் அமைப்புகள், அறக்கட்டளைகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும், 2024ம் ஆண்டுக்கான ‘இலக்கிய மாமணி’ விருதை மரபுத்தமிழ் பிரிவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு நான் வழங்கியபோது பெரிதும் அகமகிழ்ந்தார். ”தனியாரிடம் பெறும் விருதுகள் மகிழ்ச்சியளிப்பன என்றாலும், அரசு அளிக்கும் விருதுதான் அங்கீகாரம் பெறக்கூடியது” என அப்போது மனநிறைவுடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பேராசிரியர்களிடம் தமிழ் பயின்று, பல மாணவர்களுக்கு ஆசானாகத் திகழ்ந்து, இறுதிவரையில் சுறுசுறுப்பாக இயங்கித் தமிழ்ப்பணியாற்றிய அன்னாரது மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும், அவரது மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் மறைவு துயரம் தருகிறது வாழ்நாள் முழுவதும் தமிழென்ற ஒரே திசையில் கவனச் சிதறலின்றிப் பயணித்தவர் வைணவ இலக்கிய உரைவளத்தில் கரைகண்டவர் தமிழைக் கற்றுக்கொண்டே இருந்தவர்; கற்பித்துக்கொண்டே இருந்தவர் பல பொறுப்புகளில் சிறப்போடு பணியாற்றியவர் வெல்லுஞ் சொல்லறிந்து மேடைகளை வென்றவர் தலைவாழைகள் சாய்ந்துகொண்டே இருப்பதால் தோட்டம் வெறுமையாகிறது அடிவாழைகள் தலையெடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆறுதல் பெறுகிறோம் அவர் இன்மையை உணரும் குடும்பத்தார்க்கும் தமிழன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
.



Leave a Reply