தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் விருப்பம் என்பதால், அதனை முன்னிறுத்தும் விதமாக இந்த இயக்கம் நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.
தற்போது மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மூன்று மொழி கல்வி நடைமுறையில் உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது என முருகன் கேள்வி எழுப்பினார். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பெறுகின்றனர், ஆனால் ஏழை மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு ‘தமிழ் தமிழி’ என்று பேசுகிறதே தவிர, தமிழுக்காக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என விமர்சித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தமிழை உலகளவில் பிரபலப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார். திருவள்ளுவருக்கான கலாச்சார மையங்கள், காசி தமிழ் சங்கம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் போன்றவை தமிழை உலகளவில் உயர்த்தும் முக்கிய திட்டங்கள் என அவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய முருகன், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றார். பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் கிடைக்க, திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply