முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் மற்றும் பி.ஆர்.ஜி. அருண் குமார் – வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் திமுக தலையீடு குற்றச்சாட்டு; அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட வேண்டும் என கோரிக்கை

Spread the love

கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ஜுனன் மற்றும் பி.ஆர்.ஜி. அருண் குமார் ஆகியோர் மனு அளித்தனர்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஆளும் கட்சியினர் மூலம் BLA2 படிவங்கள் பெறப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், அதிகாரிகள் தாமே வீடு வீடாகச் சென்று மனு படிவங்களை நேரடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மக்கள் வேலை முடிந்து 6 மணிக்குப் பிறகே வீடு திரும்புவதால், அதிகாரிகள் ஆறு மணிக்குப் பிறகும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,

“சில BLA ஏஜென்ட்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்குச் சாதகமான மனுக்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை தூக்கி எறிகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. எனவே அதிகாரிகள் நடுநிலையாகச் செயல்பட்டு மனுக்களை மக்களிடமிருந்து நேரடியாக பெற வேண்டும்,”
என்று கூறினார்.

மேலும்,

“சில இடங்களில் திமுகவினர் அதிகாரிகளுடன் சேர்ந்து நோட்டீஸ் வழங்குகிறார்கள். இது தவறு. அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட வேண்டும். வாக்குகளைச் சேர்க்கவும் நீக்கவும் திமுக பழக்கப்பட்ட கட்சி. இதைத் தடுக்கவே தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது,”என்றும் தெரிவித்தார்.


கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்துப் பேசுகையில் அவர்,

“இது போன்ற சம்பவம் கோவையில் நடக்கக் கூடாது. காவல்துறை கடமையில் கோட்டை விட்டுவிட்டது. ரோந்து பணிகள் சரியாக நடக்கவில்லை,”
என்று விமர்சித்தார்.

அதன் காரணமாக மது மற்றும் கஞ்சா விற்பனையை சுட்டிக்காட்டிய அவர்,

“எடப்பாடியார் ஆட்சியில் கோவையில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் மாநில அளவில் விருதுகள் பெற்றது. ஆனால் தற்போது காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ள சூழல் உள்ளது,”
என்றார்.

காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும், மேலும் மது, கஞ்சா போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரிவடைந்துள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் வெளிநாட்டவர்கள் தொழில் மற்றும் மருத்துவ துறைகளில் பெருமளவில் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.