முதல்வர் ஸ்டாலினை சிறையில் அடைக்க வேண்டும் – கரூர் சம்பவம் குறித்து கடும் விமர்சனம் செய்த பாமக பொருளாளர் திலகபாமா

Spread the love

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி மீது நடைபெற்ற கூட்டு பலாத்காரம் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரியும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் பாமக நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திலகபாமா, “தமிழக முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் ‘என் கை இரும்பு கையாக செயல்படும்’ என கூறியிருந்தார்; ஆனால் தற்போது அந்த கை எங்கே போனது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “கரூர் சம்பவத்தில் போல் அந்த பெண்ணிடம் சென்று முதல்வர் சாரி கேட்பாரா? குற்றவாளிகளை குடி நோயாளிகளாக காட்டும் முதலமைச்சரே சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

“போதைப் பொருள், மது விற்பனை, டாஸ்மாக் கடைகள் ஆகியவை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என கூறியிருந்தும், அரசு அதனை நிறைவேற்றவில்லை. காலை 6 மணிக்கே சாலையில் குடிபோதையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது — இதை காவல்துறை காணவில்லையா?” என திலகபாமா கேட்டார்.

சேலம் பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் சம்பவம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். “அருள் தான் மாற்றுத்திறனாளி ஒருவரை தாக்கியுள்ளார்; பின்னர் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கலவரத்தை உண்டாக்கிய எம்எல்ஏ அருளுக்கு எதிராக பாமக சார்பில் வழக்கு தொடரப்படும்” என தெரிவித்தார்.

அதே நேரத்தில், “எந்த வகையிலும் வன்முறையை பாமக ஏற்றுக்கொள்ளாது; அறவழியிலேயே பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்” என திலகபாமா வலியுறுத்தினார்.