, , , ,

முதல்வர் திறப்புக்கு தயாரான பாலம் ! பாலத்தில் மிளிருது வண்ண விளக்குகளின் வர்ணஜாலம் !!

Ukkadam flyover
Spread the love

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், நெரிசலை குறைக்க ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த பாலத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையின் தி. நகரைப் போல கோவையிந் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. உக்கடத்தை ஒட்டிய பகுதியில் கோவை ரயில் நிலையம் அமைந்துள்ளது. நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என ஒரே பகுதியில் அனைத்தும் அமைந்து உள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்லும் சாலையாகவும் உக்கடம் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி ரூ.481 கோடி செலவில் 2018 – ம் ஆண்டு ஆதிமுக ஆட்ச்சியில் தொடங்கியது. உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப்பாலம் முதல் பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் 2 ஆவது கட்டமாக மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது. 2 ஆம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பால பணிகள் விமர்சனங்களுக்கு பின்னர் துரிதப்படுத்தப்பட்டன. கோயமுத்தூர், உக்கடம் மேம்பாலம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், உக்கடம் மேம்பாலத்தில் ஏறி செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி ஒப்பணக்கார வீதியை அடையலாம். கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை நான்கு வழித்தடமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம்  2 வழித்தடமாகவும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த பாலத்தை நாளை திறந்து வைக்கின்ற நிலையில், பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜொலிக்கின்றது. இனி உக்கடம் சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று பொதுமக்கள் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.