தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (அக்டோபர் 14) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்பு முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்” என்று கூறினார்.
அவர் மேலும், “சாதிப் பெயர்கள் பல வருடங்களாக புழக்கத்தில் உள்ளன. ஆனால் இவை சமூக ஒற்றுமைக்கு தடையாகின்றன. இனிமேலும் எந்தப் பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக் கூடாது என்பது எங்கள் உறுதி. சில பெயர்களில் உள்ள ‘ன்’ விகுதியை ‘ர்’ விகுதியாக மாற்றுமாறும் கோரிக்கை வைத்தோம்,” என்றார்.
அத்துடன், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார். “நீண்ட காலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதற்காக ஆசிரியர்கள் பலமுறை போராடியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுமென நம்புகிறோம்,” எனவும் கூறினார்.
சாதி ஒழிப்பு, கல்வித் துறை நியமனங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.



Leave a Reply