60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிறுவனத்தின் தலைமையில் நீடித்தவர் என்ற பெருமையுடன், உலக முதலீட்டு வரலாற்றில் தனி அத்தியாயமாக மாறியுள்ளார் வாரன் பஃபெட்.
நஷ்ட நிறுவனத்தை நிதி பேரரசாக மாற்றிய மனிதன்
1965-ம் ஆண்டு, ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தில் தள்ளாடிய ‘பெர்க்ஷயர் ஹேத்வே’ நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் வாரன் பஃபெட். அந்த நேரத்தில், இந்நிறுவனம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை பலருக்கும் இல்லை.
ஆனால், பங்குச் சந்தையை “சூதாட்டம்” அல்ல, “நீண்டகால அறிவியல்” என்று பார்த்த பஃபெட், நிறுவனத்தின் திசையை முற்றிலும் மாற்றினார்.
காப்பீடு முதல் ரயில்வே வரை – எல்லாம் பஃபெட் டச்
பஃபெட்டின் தலைமையில், பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனம் காப்பீடு, ரயில்வே, எரிசக்தி, சாலை போக்குவரத்து, நுகர்வோர் பொருட்கள் என பல துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்தியது.
இதன் பலனாக, ஒருகாலத்தில் நஷ்டத்தில் இருந்த நிறுவனம் இன்று உலகின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. தற்போது, அதன் பங்குகள் 7.5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்படுவது முதலீட்டு உலகையே அதிரவைத்துள்ளது.
இதன் பின்னணியில் இருந்த ஒரே பெயர் – வாரன் பஃபெட். அதனால்தான், உலகம் அவரை ‘பங்குச் சந்தையின் பிதாமகன்’ என அழைக்கத் தொடங்கியது.
95 வயதில் ஓய்வு – ஆனால் வழிகாட்டுதல் தொடரும்
95 வயதை எட்டியுள்ள வாரன் பஃபெட், வயது மூப்பின் காரணமாக தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரின் தலைமையில் வளர்ந்த பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு இன்று சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இந்நிலையில், அவர் சிஇஓ பதவியிலிருந்து விலகினாலும், செயல் சாரா தலைவராக நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை தவிர்த்த கோடீஸ்வரர்
முதலீட்டு உலகின் வழிகாட்டியாக விளங்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு தற்போது 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள் – இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய்.
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு செல்வம் கொண்டவர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பாதவர்.
“தங்கம் உற்பத்தி செய்யாது; பயத்தை மட்டுமே வளர்க்கும்” என்று வெளிப்படையாகக் கூறியவர் பஃபெட். ஒருமுறை தங்க சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தாலும், 6 மாதங்களிலேயே அதிலிருந்து வெளியேறினார்.
“முதலீடு என்பது வளர்ச்சியும் உற்பத்தியும் கொண்டதாக இருக்க வேண்டும்” என்பதே அவரது வாழ்நாள் முதலீட்டு விதி.
ஒரு மனிதன் – ஒரு காலம்
பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவது பலருக்கும் சாத்தியம்.
ஆனால், ஒரு தலைமுறையையே முதலீட்டுக்கு பயிற்றுவித்தவர் என்ற பெருமை வாரன் பஃபெட்டுக்கே உரியது.
சிஇஓ பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது தத்துவமும், முதலீட்டு பாடங்களும் உலக பங்குச் சந்தையில் இன்னும் நீண்ட காலம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



Leave a Reply