மின் கட்டண உயர்வு வரம்பு: 112 கிலோ வாட்டாக உயர்த்த கோரிக்கை

Spread the love

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவை அண்ணா சிலை அருகேயுள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, டேக்ட், கோப்மா, கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறபோது, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ஏற்கனவே மின்கட்டணமும் நிலைக்கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருப்பதால் தொழில்கள் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின் நிலைக்கட்டணம் 450% வரை உயர்த்தப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10% தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது ஒரு விதம் என்றால், ஒரே முறையில் மிகைப்படுத்தப்பட்ட உயர்வே தொழிற்துறையை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் 50 தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து முதலமைச்சரை சந்திக்க தீர்மானித்துள்ளன.

தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத் தலைவர் பிரதீப் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டண உயர்வு தொழில்துறைக்கு பெரும் தடையாக உள்ளது என தெரிவித்தார். சோலார் மேற்கூரை அமைப்பவர்களுக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசிடம் இருந்து 25% மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், அரசு 50 கிலோவாட் வரை எந்த கட்டண உயர்வும் இல்லையென தெரிவித்தாலும், 112 கிலோவாட் வரை மின் பயன்பாடு உள்ள குறுந்தொழில்களுக்கு இது எந்த பயனும் இல்லை. எனவே, கட்டண விலக்கை 112 கிலோவாட் வரை உயர்த்தவேண்டும் என தெரிவித்தார்.

கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க தலைவர் திருமலை ரவி கூறுகையில், வாடகை, மின்கட்டணம், ஊதியம், மூலப்பொருட்களின் விலை ஆகியவை தொடர்ந்து உயர்ந்ததால், கிரில் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக சுமார் 25% கிரில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும், 5,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கோவையை பாதுகாக்கப்பட்ட தொழில்துறை மண்டலமாக அறிவித்து, தொழில்களுக்கு தேவையான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.