மிக மோசமான சூழ்நிலையில் கரூர் உள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி

Spread the love
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் கரூர் மாவட்ட பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தபோது செய்தியாளர்களை சந்திக்காமல், கவலையுடன் சேலம் நோக்கி புறப்பட்டார்.

பின்னர் கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதில்,
“கரூரில் 39 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின்றன. எங்கள் நினைவுக்கு வருவதற்குள் இதுபோன்ற துயரமான சம்பவம் தமிழகத்தில் நடந்ததே இல்லை. வார்த்தைகளே வரவில்லை. பிரச்சாரத்துக்கு வரும் தலைவர்களுக்கு காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு உறுதியாக வழங்கப்பட வேண்டும். சம்பவம் குறித்த முழு விவரங்கள் வந்த பிறகு, பொதுச் செயலாளர் தமது கருத்தை தெரிவிப்பார்.

தற்போது கரூர் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகளவில் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும். மேலும், அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் மீண்டும் நடக்கக்கூடாது. அதற்காக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

கரூர் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக வந்த கேள்விக்கு, அவர் பதில் அளிக்கவில்லை.