மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அலுவலகத்தில் இன்று முக்கியமான அரசியல் நிகழ்வு நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக சார்பில் மூன்று வேட்பாளர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதற்கான தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆறு இடங்களில், திமுக மூன்று இடங்களில், அதன் கூட்டணிக் கட்சி மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் போட்டியிடவுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
திமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை எம்.பி வில்சன், கவிஞர் சல்மா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நான்கு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுத்தாக்கல் நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் ஆறு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால், போட்டியின்றியே இந்த நான்கு வேட்பாளர்களும் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே உள்ள உறவுக்கு மேலும் வலுவூட்டும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.



Leave a Reply