கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில், நச்சுப் பாம்பு கடித்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர் இல்லாததால், மூன்று மணி நேரம் மருத்துவ உதவி கிடைக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்திறனை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“மருத்துவர் இல்லாததால் ஒரு அப்பாவி விவசாயி உயிரிழந்தது மிகவும் வேதனையானது. திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை முழுமையாக செயலிழந்துள்ளது. இது முதல் முறை அல்ல; பல முறை இவ்வாறான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசு இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,”
எனக் குறிப்பிட்டார். மேலும் அவர்,
“செந்திலின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு போதாது; ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் செயலற்ற தன்மை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் இதற்கான தண்டனையை வழங்குவார்கள்,”
எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டிலும் இதே போன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்ததாகவும், அரசு அதில் இருந்து எந்தப் பாடமும் கற்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



Leave a Reply