
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 4ம் தேதி காலை 8:30 முதல் 9:30 மணி வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்காக, கடந்த ஜனவரி மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. மார்ச் 31ம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
யாகசாலை பூஜைகள் தொடக்கம்:
நேற்று காலை 9:30 மணிக்கு அக்னி சங்க்ரஹணம் நடைபெற்றது. பின்னர், கன்னிமார் கோவில் பின்புறம் உள்ள சுனை தீர்த்தக்கிணற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன் பின், சிறப்பு பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர், பாலாலயம் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பரிவார மூர்த்திகளின் கலசங்கள் யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டு, மாலை 5:00 மணிக்கு மங்கல இசையுடன் விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான சுப்பிரமணியசுவாமி, ஆதி மூலவர் கலாகரிஷணம் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு யாகசாலையில் 96 வகையான மூலிகை திரவியங்கள் கொண்டு ஹோமம் செய்யப்பட்டது. இதன் மூலம் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள் கலந்து கொண்டு பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
இரவு 10:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தப்பட்டு முதல் கால வேள்வி பூஜை நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மஹா கும்பாபிஷேகம்:
வரும் ஏப்ரல் 4ம் தேதி காலை 8:30 முதல் 9:30 மணிவரை மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்.
Leave a Reply