கோவையின் புகழ் பெற்ற மருதமலை முருகன் கோவிலில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படஉள்ளது. இந்த சிலை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவிலின் குன்றில் அமையவுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன விலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறுகையில் “ஆனைக்கட்டி வனப்பகுதியில் சட்டவிரோதமாக, எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளை மூடி, கட்டடடங்களை இடிக்க வேண்டும். மருதமலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை கட்டப்பட உள்ளது. வனப்பகுதியில் முறையான அனுமதி இல்லாமல் சிலை அமைப்பதற்கு அறநிலையத் துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
கோவையில் இருந்து ஆனைக்கட்டி வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதால், இந்த சாலையை இரவு நேரங்களில் மூட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் கடந்த 31ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இ 300 சதுர மீட்டருக்குள் தனியார் தங்கும் விடுதிகள் கட்டியிருந்தால், வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற தேவையில்லை. அதேநேரம், இந்த விடுதிகள் பட்டா நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் கூட்டு ஆய்வுகளை நடத்த வேண்டும். வனப்பகுதிக்குள் இந்த விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு 3 மாத கால அவகாசம் வேண்டும்.மருதமலை கோவிலில் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க மலை பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறவேண்டும். ஆனால், இதுவரை தடையில்லா சான்றிதழ் கேட்டு மருதமலை கோவில் செயல் அதிகாரி விண்ணப்பிக்கவில்லை. வனப்பகுதியில் உள்ள சாலையை இரவில் மூட வேண்டும் என்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த சாலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை காட்டு பன்றி, காட்டுமாடு, மான் என்று 5 வனவிலங்குகள் மட்டுமே வாகனம் மோதி இறந்துள்ளன என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.



Leave a Reply