மதுரையில் பிரமாண்ட த.வெ.க. மாநாடு – 45 நிமிடங்கள் பேச உள்ள விஜய்

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியை நடிகர் விஜய் 2024 பிப்ரவரியில் தொடங்கியதைத் தொடர்ந்து, மாநில அளவிலான பெரிய நிகழ்வுகளை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டுக்குப் பிறகு, தற்போது மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆக. 21) மாலை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் வாகன நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. LED விளக்குகள், பச்சைக் கம்பளம், 2 லட்சம் இருக்கைகள், 300 VIP இருக்கைகள், உயர்மட்ட ஒளி அமைப்புகள், மருத்துவ வசதிகள் என மாநாட்டு திடல் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்:

  • 216 மீட்டர் நீள மேடை, 200 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் அமரும் வகையில் வடிவமைப்பு

  • தொண்டர்களை சந்திக்க விஜய்க்கு 300 மீட்டர் ரேம்ப் வாக் நடைமேடை

  • 600 பேர் கொண்ட மருத்துவக் குழு (250 டாக்டர்கள் + 250 செவிலியர்கள்)

  • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு

மாநாட்டின் தொடக்கமாக, விஜய் த.வெ.க.க் கொடியை ஏற்றுகிறார். அதன் பின், அம்பேத்கர், காமராஜர், பெரியார், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கைப் பாடல் ஆகியவற்றுக்குப் பிறகு 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

நிறைவாக, த.வெ.க. தலைவர் விஜய் சுமார் 45 நிமிடங்கள் எழுச்சியுரையாற்றுகிறார். இந்த உரையில் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி புதிய அரசியல் பார்வையும், தொண்டர்களுக்கு உத்வேகமளிக்கும் முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரடியாக கண்காணித்து வந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள், நிகழ்வை வெற்றிகரமாக நடத்த தயாராகியுள்ளனர்.