மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் ஆவேசமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “நல்ல காரியம் தொடங்கும் முன் மஞ்சள் எடுத்து வைப்பது நம் மரபு. மஞ்சளுக்கு தனி உணர்வு இருக்கிறது. நம் கட்சிக் கொடியிலும் மஞ்சள் நிறம் உள்ளது. ஈரோடு விவசாயத்திற்கு காளிங்கராயன் அணை மற்றும் கால்வாய் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனக்கு எதிராக தொடர்ந்து சூழ்ச்சி செய்யும் ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மண்ணில் பிறந்த மகத்தான மனிதரைப் பற்றியும் நாம் பேச வேண்டும்” என்றார்.
“எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். நான் சினிமாவுக்கு வந்த பத்து வயதிலிருந்தே மக்களுடனான உறவு தொடங்கியது. உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை கைவிடாதீர்கள். எனக்காக இறுதிவரை நிற்பீர்களா? நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்களுக்கு எதுவும் செய்யாமல் கதைகள் மட்டும் பேசப்படுவதாக விமர்சித்த அவர், “அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயன் இருக்கும்?” என கேள்வி எழுப்பினார்.
பெரியார் குறித்து பேசிய விஜய், “ஈரோடு மண் தந்த பெரியார் தமிழ்நாட்டையே திருப்பிய மனிதர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டவர். பெரியார் எங்கள் கொள்கை முன்னோடி. பொதுவாழ்க்கையில் இருந்தபோதும் ஒரு பைசா கூட சம்பாதிக்காதவர். பெரியார் பெயரை சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து பேசிய அவர், “அவர்கள் தமிழ்நாட்டின் சொத்து. யார் வேண்டுமானாலும் அவர்களைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு பணம் துணை; எனக்கு மக்கள் அன்பே துணை” என்றார்.
காஞ்சிபுரம் உரை தொடர்பாக விளக்கம் அளித்த விஜய், “நான் மக்களுக்கான சலுகைகளுக்கு எதிரானவன் அல்ல. மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்ல முடியாது. மக்கள் மானத்தோடு வாழ வேண்டும். மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் வந்து நிற்பான்” என்றார்.
திமுக ஆட்சியை விமர்சித்த அவர், “அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் பட்டதாரி என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பள்ளிகளில் இடைநிறுத்தம் அதிகரித்தது திமுக ஆட்சியில்தான்” என குற்றம் சாட்டினார்.
“தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது அரசியல் என்றால் அது எனக்கு வராது. வேண்டாமென்று விட்டுவைத்திருக்கிறேன்” என கூறினார்.
2026 தேர்தல் குறித்து பேசிய விஜய், “களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம். திமுகவும் பிரச்சினைகளும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுள்ளன. திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியால் மட்டுமே முடியும்” என்றார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு பெரும் பலம் என கூறிய அவர், மேலும் பலர் தவெகவில் இணைய உள்ளதாகவும், அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.



Leave a Reply