இதனால், ஆத்திரம் கொண்ட பாதுகாவலர்கள், சிறைவாசிகள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட செய்தனர். அவர்களின் மத்தியில் ஷின் டாங்கை நிறுத்தினர். சிறுவனின் கண் முன்னரே தாயை தூக்கில் போட்டனர். அடுத்து, சகோதரரை சுட்டுக் கொன்றனர். ஆடிப் போனான் ஷின் டாங். ஒரு வேளை உணவுக்காக பெற்ற தாயையும், உடன் பிறந்தவனையும் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்தது. அதே வேளையில், சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்து போய் விட வேண்டுமென்று சிறுவன் கங்கணம் கட்டிக் கொண்டான். அவனுக்கு 23 வயதான போது , பாதுகாவலர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு சிறையில் இருந்து தப்பித்தும் விட்டான். பின்னர், ஷின் டாங், சீனா வழியாக தென்கொரியாவுக்கு சென்று தஞ்சமடைந்தான். தொடர்ந்து, தென்கொரியாவில் வழக்கறிஞருக்கு படித்து, மனித உரிமைகளுக்கு எதிராக போராட தொடங்கினான். வட கொரியாவின் நடக்கும் அவலங்களை புட்டு புட்டு வைத்தான் . ஷின் டாங்கின் குரல் ஐ.நா வரை ஒலித்தது. ஷின் டாங் பற்றி ‘எஸ்கேப் ப்ரம் கேம்ப் 14 ‘ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. பேட்டி ஒன்றில் ஷின் டாங் கூறுகையில், பைபிளில் சொர்க்கம், நகரம் பற்றி படித்திருக்கிறோம். நரகத்தில் மக்களை தீயில் போடுவார்கள் என்று கூறப் பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு நரகம்தான் கேம்ப் 14 என்று கூறியிருந்தார். ஷின் டாங்கின் வார்த்தைகள் வடகொரியாவின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டியது. சரி இந்த நாட்டில் வசிக்கும் மக்களின் நிலைதான் என்ன? வடகொரியர்களின் தினசரி வாழ்கை முறைதான் எப்படிதான் இருக்கிறது என்று பார்ப்போம். வடகொரியாவில் சுமார் 2.5 கோடி மக்கள் வசிக்கிறார்கள். உலக மேப்பில் தென்கொரியாவுக்கு மேலேவும் சீனாவுக்கு கீழேவும் இந்த நாடு அமைந்துள்ளது. நீங்கள் இரவு நேரத்தில் சேட்டிலைட் புகைப்படங்களை பார்த்தால் சீனாவும், தென்கொரியாவும் மின்விளக்குகளால் ஜொலிக்கும். இந்த இரு நாடுகளுக்கும் இடையேவுள்ள வடகொரியா இருளில் மூழ்கி கிடக்கும். வடகாரியாவின் முழு பெயர் டெமாக்ரடிக் பீப்பிள்ஸ் ரீபப்ளிக் ஆக் கொரியா( DPKR )என்பது. அதாவது ஜனநாயக மக்களின் கொரிய குடியரசு என்று அர்த்தம் கொள்ளலாம். பெயரில் மட்டும்தான் ஜனநாயகமும், குடியரசும் இருக்கிறதே , தவிர வேறு எந்த விதத்திலும் வடகொரியாவில் ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் வேலையில்லை என்பதே உண்மை. இரவு நேரத்தில் வடகொரியர்கள் படிக்க முடியாது, டி.வி பார்க்க முடியாது.
அவ்வளவு ஏன் மாலை 7 மணிக்கே உறக்கத்துக்கு சென்று விட வேண்டும். மக்கள் இருளில் வாழ பழகிக் கொள்ள வேண்டும். பஞ்சமும் பட்டினியும் இவர்களை பிடித்துக் கொன்ற ஒன்று என்றாலும் மிகையில்லை.
கடந்த 1995 ஆம் ஆண்டுவாக்கில்ர வடகொரியாவில் படிப்படியாக தவளைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. காரணம் என்ன தெரியுமா? பசிக் கொடுமையால் மக்கள் தவளைகளை பிடித்து சாப்பிட தொடங்கியதுதான். 1995 முதல் 98 ஆம் ஆண்டு வரை, அந்த நாட்டில் தலை விரித் தாடிய பஞ்சம் கார ணமாக 5 லட்சம் முதல் 20 லட்சம் மக்களை வரை இறந்து போனதாக சொல்லப்படுகிறது. ஆனால், வடகொரியா இப்படிப்பட்ட கொடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டது 1990 ஆம் ஆண்டுக்கு பிறகுதான். 1950 முதல் 1980 ம் ஆண்டு வரை வட கொரியா தென்கொரியா, சீனா, இந்தியாவை விட விட மிகச்சிறந்த பொருளாதார பலமிக்க நாடாக இருந்தது. அப்போதே, வடகொரிய மக்களின் ஆண்டு வருமானம் 2,400 டாலர்களாக இருந்தது. இலவச மருத்துவம், சிறந்த போக்குவரத்து, சத்தான உணவு வகைகள் கிடைத்தன. ஆண்டுக்கு ஆண்டு 4.5 சதவிகிதம் என ஜி.டி.பி உயர்ந்து கொண்டிருந்தது. இதற்கு பின்னணியில் சோவியத் யூனியன் என்ற வல்லரசு இருந்தது. அப்போதிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை போல மிகுந்த கொடூரமானவர்களாகவும் இல்லை. கொஞ்சம் மக்களையும் பார்த்துக் கொண்டனர். இதனால், ரஷ்யா மிகக்குறைந்த விலையில் கொடுத்த எண்ணெய், அரிசி, கோதுமை போன்றவற்றை வடகொரிய அரசு மக்களுக்கும் வழங்கியது. 1990 ஆம் ஆண்டு சோவியத்யூனியன் உடைந்த பிறகு, வடகொரியாவின் நிலைமை மோசமாக தொடங்கியது. வடகொரியாவின் பொருளாதாரம் உடைந்து சிதறியது. எண்ணெய் கிடைக்காததால், மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் இரவு நேரத்தில் இருளில் கிடக்க தொடங்கினர். அணு ஆயுதத்தை கைவிட்டால், உதவி செய்வதாக அமெரிக்கா வடகொரியாவிடத்தில் கூறியது. ஆனால், வடகொரியா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து, அமெரிக்கவும் அதன் ஆதரவு நாடுகளும் வடகொரியாவை தனிமைப்படுத்தின.
(5 ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்ற தேர்தல்… வடகொரியாவில் ஓட்டு சதவிகிதம் 99.9 சதவிகிதம்… நம்புவீர்களா? பார்க்கலாம் அடுத்த வாரம்)



Leave a Reply