தங்கத்தை பிணையமாக வைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் சில நிமிடங்களில் பணம் தருகின்றன. ஒரு கிராமிற்கு 9, 000 வரை கிடைக்கிறது. இதனால் வறுமையில் உள்ள மக்கள் தொடங்கி, தொழில் முனைவோர் வரை பலர் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள். அதேநேரம் தமிழ்நாட்டில் வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களில் வங்கி ஊழியர்கள், குறிப்பாக நகை மதிப்பீட்டாளர்கள், மேலாளர்கள் மற்றும் சில முகவர்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கோடிகளில் பல்வேறு வங்கிகளில் மோசடிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நகை மதிப்பீட்டாளரை பொறுத்தவரை, வங்கிக் கடனுக்காக அடகு வைக்கப்படும் நகைகள் உண்மையானவையா, அவற்றின் எடை மற்றும் தரம் என்ன என்று சோதித்து சான்றளிப்பார். அவரே பெரும்பாலும் மோசடிக்கு முக்கிய காரணமாக இருப்பதும், வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருப்பதும் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது.
கோவையை அடுத்த துடியலூரில், துடியலூர் விவசாய கூட்டுறவு சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) இருக்கிறது. இதன் கூட்டுறவு சங்கத்தில் சமீபத்தில் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தது அந்த ஆய்வில் தெரிய வந்தது.இது தொடர்பாக ஆய்வு செய்த போது 15 பேரின் முகவரியில் போலி நகைகளை அடமானம் வைத்து சுமார் ரூ.3 கோடி கடன் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டத. இது குறித்து துடியலூர் கூட்டுறவு துறை அதிகாரி, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளருக்கு புகார் அனுப்பினார். இது தொடர்பாக கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதில் போலி நகைகளை அடமானம் வைத்து முறைகேடு செய்ததில் கூட்டுறவு சங்க ஊழியர் சார்லஸ் (41), நகை மதிப்பீட்டாளர் கார்த்திகைராஜ் (47) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லஸ், கார்த்திகைராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Leave a Reply