, , ,

போராட்டம்… பேட்டி…கைது! பாஜகவில் குஷ்புவுக்கு திடீர் முக்கியத்துவம் பின்னணி என்ன?

kushboo
Spread the love

பாஜகவில் கொஞ்சகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குஷ்புவுக்கு திடீர் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  போராட்டம், ஆவேச பேட்டி, கைது என தலைப்புச் செய்திகளில் குஷ்பு பெயர் அடிபடுகிறது. இதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக அனுதாபி, காங்கிரஸ் நிர்வாகி என்று அரசியல் செய்த குஷ்பு பின்னர், நேரெதிர் முகாமான பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் இணைந்த சூட்டோடு முக்கிய பொறுப்பு ஏதாவது தரப்படும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிதான் கிடைத்தது. சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லாத இந்த பதவியை கொஞ்சநாள் வகித்துவிட்டு, பின்னர் அதை உதறித் தள்ளினார் குஷ்பு.

அதன் பிறகும் என்னென்னவோ செய்து பார்த்தார்; பாஜக தலைவர்கள் யாரும் குஷ்புவை கண்டு கொள்ளவில்லை. டெல்லி மேலிடம் கப்சிப் என்றிருக்க, தமிழக பாஜகவிலும் யாரும் குஷ்புவுக்கு எந்த அலுவலையும் தராமல் ஒதுக்கி வைத்திருந்தனர். தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற உதவாத பதவியை வைத்து என்ன செய்வது என்று விரக்தியின் உச்சத்தில் குஷ்பு புழுக்கத்தில் இருந்து வந்தார்.

அண்மையில் பேட்டி அளித்த குஷ்பு, பாஜக மாநில தலைமையிடம்  இருந்து தனக்கு எந்த அழைப்பும் வருவதில்லை என்று கூறினார்.  இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் யாரையும் அழைப்பதில்லை. மாநில பொறுப்பாளர் கேசவ விநாயகம்தான் அழைப்பார் என்றார்.

இந்த நிலையில் தான்,  நீண்ட நாட்களுக்குப் பிறகு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். சூடுபறக்க திமுக அரசை விமர்சனம் செய்து  காராசாரமாக பேட்டி அளித்தார்.  அத்துடன் நிற்காமல் மதுரையில் பாஜக பேரணியிலும் பங்கேற்க சென்றார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜன. 3இல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நீதிகேட்டு போராட்டம் என்ற பெயரில், மதுரை சிம்மக்கல் கண்ணகி கோவிலில் தீச்சட்டி எடுத்து பாஜகவினர் போராட்டம் செய்வதாக அறிவித்தனர். எனினும், போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்தது.

எனினும் தடையை மீறி பாஜவினர் பேரணியாக செல்ல முயன்றதால் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல் துறையினர்- பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது. அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பேசிய குஷ்பு, “பாஜகவின் கூட்டத்தை பார்த்ததும் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. இது நீதிக்காக கூடிய கூட்டம். பிரியாணிக்காக காசுக்காக திமுக கூட்டும் கூட்டம் போலில்லாமல் தானாக கூட்டம் சேர்ந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் பல விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், பெண்களுக்கு என்ன செய்தார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பாஜகவிற்கான பிரச்சனை இல்லை. தமிழகத்திற்கான பிச்சனை இது. பாஜக விளம்பரம் தேடவில்லை.  பெண்களை காப்பாற்ற வக்கில்லை. திட்டம் கொடுத்து கொண்டுள்ளார் முதல்வர். பெண்களை முதலில் காப்பாற்றுங்க அய்யா. அத்துடன் நிற்காமல், “தமிழ் மண் மேல கண்ணகி மேல் சத்தியம் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.சும்மா விட மாட்டோம்” என்று ஆவேசமாக முழங்கினார்.

திடீரென பாஜகவில் குஷ்புவுக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது, அக்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? பின்னணிய்ல் யார் இருக்கிறார்? இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். அவர்கள் தெரிவித்ததாவது:

அரசியல் படிப்புக்கு அண்ணாமலை லண்டன் சென்று விட்டு, சென்னை திரும்பிய பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.  சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விஜயின் வருகை பாஜகவுக்கு கொஞ்சம் கவலையை தந்துள்ளது. அவரது பாப்புலாரிட்டியை எதிர்கொள்ள, சினிமா நட்சத்திரங்களில் தயவு பாஜகவுக்கு தேவை என்று அண்ணமலை கணக்கு போடுகிறார்.

மக்கள் மத்தியில் பரிச்சயமான சில முகங்கள் பாஜகவிற்கு இருந்தால்தான் கிராமப்புறங்கள் வரை கட்சியை கொண்டு செல்ல முடியும் என்று அண்ணாமலை நம்புகிறார். அதற்கு குஷ்பு போன்ற பிரபலங்கள்தான் சரியான தேர்வாக இருக்கும் என்று கருதி, அவருக்கு கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்தார். கட்சி தலைமையிடம் இருந்து அழைப்பு வந்த  பிறகே கமலாலயம் சென்ற  குஷ்பு, அதன் பின் ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அடுத்த சில நாட்களில் மதுரை போய் போராட்டத்தில் பங்கேற்று, கைதாகி அரசியல் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே, எந்த பதவியில் கிடைக்கவில்லையே என்று சோகத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி இருந்து வருகிறார். இந்த வேளையில் குஷ்புவுக்கு பாஜகவில் முக்கியத்துவம் தரப்படுவதை விஜயதரணி உற்று நோக்கி வருகிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். நமிதா, கங்கை அமரன் போன்ற சினிமா நட்சத்திரங்களுக்கும் கூட திடீர் முக்கியத்துவம் தரப்படலாம்.

எது எப்படியானாலும் தமிழக பாஜகவில் அடுத்த சில மாதங்களில் சில அதிரடிகளை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் நிச்சயம்.