கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் நிறுவனர் ஜெயம்பாண்டியன் பேசினார்.
அவர் கூறுகையில், “முறையான வரிகளை நாங்கள் செலுத்தி வந்தாலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் போலீசாரை போல் நடந்து, வழிப்பறி செய்கிறார்கள். ஒரு டோல் கேட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகளை நிறுத்தி வைப்பதால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இது மன உளைச்சலை உருவாக்குகிறது” என்றார்.
புதிய அதிகாரிகள் பணிக்கு வந்தவுடன் நடைமுறை தெரியாமல் சோதனை ஆணை (checking order) விடுவதாகவும் அவர் சாடினார். “போக்குவரத்து துறை அமைச்சர் நன்றாக பேசுகிறார். ஆனால் கீழ்தட்ட அதிகாரிகள் கடுமையான போக்குடன், தேவையற்ற அபராதங்களை விதிக்கின்றனர்,” என்றும் கூறினார்.
அதிகாரிகள் சோதனை செய்ய எதிர்ப்பு இல்லையென்றும், பயணிகள் இல்லாத நேரங்களில் நேரடியாக ஆம்னி நிலையத்திற்கு வந்து சோதிக்கலாம் என்றும், ஆனால் பயணிகள் உள்ளபோது செய்யப்படுவது அவசர நிலையை உருவாக்குவதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதிக கட்டண வசூல் குறித்த குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர்கள், “போக்குவரத்து துறை கட்டண நிர்ணயத்தை செய்வதில்லை. ஆனால் கட்டண அதிகமாக உள்ளது என்று கூறி அபராதம் விதிக்கப்படுகிறது. துறை உரிய கட்டணத்தை நிர்ணயித்தால், அதற்கேற்ப நாங்கள் பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம்,” என்றனர்.
மேலும், அவர்கள் கூறியதாவது: “மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 1.2 லட்சம் ரூபாய் மாநில வரி, மாநிலங்களுக்கு இடையேயான வரியாக 90 ஆயிரம் ரூபாய், சாலை வரிகளாக வருடத்திற்கு 6 முதல் 7 லட்சம் வரை செலுத்தி வருகிறோம். ஒன் இந்தியா பாஸ் வரியும் கட்டுகிறோம். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது போல் நமக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.”
வார நாட்களில் வெறும் ₹500-₹600 கட்டணத்தில் பேருந்துகளை இயக்குகிறோம் என்றும், லாபம் இல்லையென்றாலும் பேருந்துகளை பழுதடையாமல் வைத்திருக்கவே இயக்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பண்டிகை நாட்களில் கட்டண உயர்வு இயல்பானதென்றும், அதனை மறைமுகமாகத் தெரிவித்தனர்.
“அனைத்து ஆவணங்களும் ஒழுங்காக இருந்தும், சீட் பெல்ட் இல்லை போன்ற காரணங்களைக் கூறி அபராதம் விதிக்கப்படுவதால், உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்,” என கடும் எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்தனர்.



Leave a Reply