பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகேயுள்ள கொண்டேகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி (45) இருசக்கர வாகனப் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். அவர் தனது தாய் திருமாத்தாள் (65), மனைவி கலையரசி மற்றும் மகள்கள் ஹரிதா (18), கௌசிகா (16) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கௌசிகா மற்றும் நெகமம் கம்பளாங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24) ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அபிஷேக் தனது பெற்றோருடன் கௌசிகாவின் வீட்டுக்கு சென்று திருமணம் குறித்து பேசினார். ஆனால், கௌசிகாவுக்கு திருமண வயது நிறைவடையாததால் தற்போது திருமணம் நடத்த முடியாது; உரிய வயது வந்த பின் பேசலாம் என்று பெற்றோர் மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கௌசிகாவை திருமணம் செய்யுமாறு அபிஷேக் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை இரவு மீண்டும் கௌசிகாவின் வீட்டுக்கு சென்ற அவர், திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னிடம் வைத்திருந்த கத்தியால் கௌசிகாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தடுக்க வந்த பாட்டி திருமாத்தாள் மற்றும் சகோதரி ஹரிதாவையும் அவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் கௌசிகா மற்றும் திருமாத்தாள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. கையில் காயமடைந்த ஹரிதா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெகமம் காவல் துறையினர், உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். தலைமறைவான அபிஷேக்கை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.



Leave a Reply