கோவை நன்னெறிக் கழகம் பல சான்றோர்களால் அற நெறியை வளர்த்தெடுத்த அரும் பெரும் அமைப்பு.
இதன் 68 ஆம் ஆண்டு விழா கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நன்னெறிக் கழகத் தலைவர் தொழிலதிபர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்புமிகு விழாவில் பேராசிரியர் த.ராஜாராமுவிற்கு தமிழ் நெறி செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா தலைமை வகித்து தலைவர் எம்.என்.பத்மநாபன் பேசுகையில், தமிழ் உலகில் மிகவும் சிறப்பு பெற்ற பல ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும்
நன்னெறிக் கழகம் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 68 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், தமிழ் இலக்கிய உலகில் முதன்மை பேச்சாளர்களில் சிறந்து விளங்கி வரும் பேராசிரியர் த. ராஜாராமுக்கு விருது வழங்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. மிகவும் பொருத்தமானவருக்கு இந்த ஆண்டு விருது வழங்குவதை எண்ணி அனைவரும் பூரிப்படைகிறோம் .தமக்காக வாழாமல், தமிழுக்காக வாழும் பேராசிரியர் ராஜாராம் போன்ற தமிழ் அறிஞர்களை பொக்கிஷமாக அனைவரும் பாதுகாக்க வேண்டும். நன்னெறிக் கழகத்தின் அழைப்பினை ஏற்று இந்த விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் மகிழ்வான வணக்கம் கூறி வரவேற்பதில் பெருமை அடைகிறோம் என்றார்.
பேச்சாளர் சுகி சிவம் விழாவில் வாழ்த்தி பேசும் போது, இன்றைய காலகட்டத்தில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனை மிக மிகக் குறைந்து விட்டது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில், குறிப்பிட்ட ஆண்டு வரை இளை
ஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
அப்பொழுதுதான் அவர்களுக்கு பொறுப்புணர்வு வரும் என்ற அடிப்படையில் அந்த அரசு, இளைஞர்களை நல்வழி படுத்துகிறது. லண்டனில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், சமூக சேவை செய்திருப்பதற்கான சான்றிதழ் இருந்தால் தான் மருத்துவராக முடியும். தமிழ் செம்மல் விருது பெறும் ராஜாராம், இளகிய மனம் கொண்டவர். கோபம் கொள்ளாதவர். கடும் சொல்; கொடும் சொல் பேசாதவர் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர். தன்னை சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும் என்ற உ யர்ந்த எண்ணம் கொண்டவர். தவத்திற்கு குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜா, பேராசிரியர்கள் சாலமன் பாப்பையா, நமசிவாயம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஞான ஆசிரியர்களுடன் மேடையில் பேசிய பெரும் பேச்சாளர்.தமிழ்த்தாயின் நிரந்தர ஆசி பெற்ற ராஜாராம், மேடைகளில் அநாகரிகமாக பேசுவதை எள்ளளவும் காண முடியாது என்றார்.
பேராசிரியை பர்வீன் சுல்தானா வாழ்த்தி பேசுகையில், கோவை நன்னெறிக் கழகம்,கோவைக்கிழார், பி.எஸ்.ஜி. கோவிந்தசாமி நாயுடு, நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில், சாலமன் பாப்பையா உள்ளிட்ட மிகப்பெரும் சான்றோர்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
இன்று நாட்டுப்பற்று என்பது அரிதாகி விட்டது. இந்த காலகட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி தமிழகம் முழுவதும் மேடைகளில் அதிகமாக பேசி வருபவர் பேராசிரியர் ராஜாராம். நேதாஜி, சுகதேவ், பகத்சிங், விவேகானந்தர், பாரதி போன்ற அறிஞர் பெருமக்களை பற்றி ராஜாராம் பேசும் போது,அந்தப் பெருமகன்கள் நம் கண் முன்னே தோன்றி விடுவர்.
அந்த அளவுக்கு பேச்சில் வலிமை கொண்டவர். நன்னெறிக் கழகம் அவருக்கு இந்த விருதினை கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. வளரும் தலைமுறை பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, ஆசிரியர் பணி என்பது ஒரு மிகப்பெரும் தவம். அதனை உளப்பூர்வமாக செய்தவர் பேராசிரியர் ராஜாராம். சிறந்த வாசகரான அவர், ஆசிரியர் மாணவர் என்ற அவரது நூலினை இங்கு வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி.
4 முதுகலை பட்டம் பெற்ற பேராசிரியர் ராஜாராம், மேடைகளில் பேசும் போது,கேட்டுக் கொண்டே இருக்கலாம். பல உலக நாடுகளுக்கு நம் தாய் மொழியாம் தமிழின் பெருமையை கொண்டு சென்றவர் என்றார். பேராசிரியர் ராஜாராமுக்கு, நன்னெறிக் கழகத் தலைவர் பத்மநாபன் நல்லாடை அணிவித்து, தமிழ் நெறி செம்மல் விருது வழங்கினார்.
ராஜாராம் துணைவியாருக்கு, பர்வீன் சுல்தானா சிறப்பு செய்தார். விழாவில், இலக்கியவாதிகள், கவிஞர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் ராஜாராமுக்கு தமிழ் நெறி செம்மல் விருது – கெளரவித்தது கோவை நன்னெறிக்கழகம்

Leave a Reply