புதுச்சேரியின் உட்கட்டமைப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்கிறார்” – முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் புதிய மேம்பால பணிகள் துவக்கம்

Spread the love

புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை புதிய 4 கி.மீ. மேம்பாலம் கட்டும் பணிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, பணிகளை தொடங்கினார்.

புதிய மேம்பால பணிகள் ₹436 கோடி மதிப்பில், 30 மாதங்களில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் கட்டப்படுகிறது.

இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சில் கூறியதாவது, “புதுச்சேரி மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த மேம்பாலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கியமான பணியாகும். சுற்றுலா வருகையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய உள்கட்டமைப்புக்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. பிரதமர் இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார், இதற்காக புதுச்சேரி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

மேலும், ₹25 கோடியில் 14 கி.மீ. ஈசிஆர் சாலை மேம்பாடு மற்றும் ₹1,588 கோடியில் புதுச்சேரி முதல் பூண்டியான் குப்பம் வரை நான்கு வழிசாலை திறப்பு போன்ற பணிகளும் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மேம்பாலம் மற்றும் பாதைகள் புதுச்சேரியின் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.