புகழ் நடித்த புது படம்… வெளியீடு எப்போது?

Spread the love

‘குக் வித் கோமாளி’ மூலமாகப் புகழ் பெற்ற புகழ் நடித்துள்ள படம்தான் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’.ஜே.சுரேஷ் இதனை இயக்கியிருக்கிறார். இதன் ஆடியோ வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது.

முழுமையாகத் தயாராகி, நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருந்த இத்திரைப்படம் வரும் ஜூலை 27ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

பூனை என்று நினைத்து ஒரு புலிக்குட்டியை நாயகன் வளர்ப்பதும், அதனைத் தேடுகிற வனத்துறையினரிடம் அவர் பிடிபட்டாரா என்பதும் இதன் கதையாக இருக்கும் என்பதைக் காட்டியது அந்த ட்ரெய்லர். யுவன் சங்கர் ராஜாவின் இசை இப்படத்திற்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஷிரின் காஞ்ச்வாலா, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, பிரமிட்குமார், விஜய் சேயோன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்காகத் தாய்லாந்திலுள்ள புலிகள் காப்பகமொன்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவின்போது, ‘புலிக்கு பல்லு விளக்குற மாதிரி ஒரு காட்சி எடுக்கப் போறதா சொன்னாங்க’ என்று சில தகவல்களைச் சொல்லியிருந்தார் நாயகன் புகழ்.