பீகாரில் திடீரென்று அமைச்சரான இளைஞர்

Spread the love

பீகார் அரசியலில் ஜேடி(யு) தலைவர் நிதீஷ் குமார் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அமைச்சரவையில் மொத்தம் 26 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், மிகவும் பேசப்பட்ட மற்றும் எதிர்பாராத பெயர் தீபக் பிரகாஷ் குஷ்வாஹா. 36 வயதான இவர் சாப்ட்வேர் இன்ஜீனியர்.

அரசியல் உலகில் அதிகம் அறிமுகமில்லாத இந்த இளைஞர், அமைச்சரவை பதவிக்கு உயர்த்தப்பட்டிருப்பது பீகார் அரசியலில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் கல்வி கற்றுவிட்டு சமீபத்தில் இந்திய திரும்பியதாக கூறப்படும் தீபக்கைப் பற்றி பொதுமக்களுக்கு கூட அதிகமான தகவல்கள் இல்லை. ஆனால் அவரின் குடும்ப பின்னணி மட்டும் மிக வலுவானது.

தீபக்கின் தாயார் சினே லதா குஷ்வாஹா, 2025 சட்டமன்றத் தேர்தலில் சசாரம் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை உபேந்திர குஷ்வாஹா, பீகார் மற்றும் மத்திய அரசியலில் முக்கியமான குரல். முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.

அமைச்சரவையில் சினே லதா குஷ்வாஹாவே வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்த வேளையில், அவர்களின் மகன் தீபக் பிரகாஷ் நியமிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர், எம்.எல்.ஏவாக இல்லை. இதனால், 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ ஆக வேண்டும். இதனால், பீகாரில் ஏதாவது ஒரு தேர்தலுக்கு இடை தேர்தல் வரலாம்.