பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மார்கழி மாத தரிசனத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அர்த்த மண்டபத்தில் நுழைய முயன்ற போது இசையமைப்பாளர் இளையராஜாவை பக்தர்களும், கோயில் ஜீயர்களும் தடுத்து நிறுத்தி, அர்த்தமண்டபத்திற்குள் நுழைய விடாமல் வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், வெளியே வந்த இளையராஜா மண்டபத்தின் படி அருகே நின்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த சம்பவம் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகி இருக்கிறது. உற்சவர் வீற்றிருக்கும் கருவறை மட்டுமின்றி அர்த்த மண்டபமும் கருவறையாக பாவிப்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறையின் (மதுரை) இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக புகழ்பெற்ற நாச்சியார் ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு டிசம்பர் 15 அன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயருடன், இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார். இந்த கோயிலில், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், மூலவர் கருவறைகளிலும், அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், உற்சவரும் எழுந்தருளி உள்ளனர். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், மடாதிபதிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற மரபு காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயருடன், இசையமைப்பாளர் இளையராஜா அர்த்த மண்டபம் செல்லும் போது அங்குள்ள மற்ற ஜீயர் இந்த மரபை பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர். இதனை இளையராஜா சரியான கோணத்தில் புரிந்து கொண்டு தான் அவர் அர்த்த மண்டப வாசலில் இருந்து சாமி தரிசனம் செய்தார், “என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Leave a Reply