பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரலாற்றை திரித்து தவறான கருத்துகளை கூறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக கண்டித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற “ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்” (Rashtriya Ekta Diwas) நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “சர்தார் வல்லபாய் பட்டேல் ஜம்மு & காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார், ஆனால் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை” என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த உரையை கண்டித்த செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரலாற்றை திரித்து தவறான கருத்தை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
1947 அக்டோபர் 26 அன்று ஜம்மு & காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது ஜவஹர்லால் நேரு பிரதமராகவும், சர்தார் வல்லபாய் பட்டேல் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். இருவரும் இந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்காக ஒரே நோக்கில் செயல்பட்டனர்,” எனக் கூறியுள்ளார்.
மேலும்,
“இருவரையும் எதிராக நிறுத்தும் முயற்சி நாட்டின் வரலாற்றையும் கண்ணியத்தையும் சிதைக்கும் ஆபத்தான செயல். வரலாற்றை அரசியலுக்காக வளைத்து பேசுவது பிரதமர் பதவிக்கு அழகல்ல.
பீகார் தேர்தலை முன்னிட்டு வாக்கு வங்கியை குறிவைத்து கூறப்படும் இத்தகைய அரசியல் உரைகள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்,” எனவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வப்பெருந்தகை, “இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கும் உரிய மரியாதை வழங்குவது மத்திய அரசின் கடமை” என்றும் வலியுறுத்தியுள்ளார்.



Leave a Reply