பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது; பிங்க் பஸ்கள் போதிய அளவில் ஓடவில்லை, பல இடங்களில் பழுதாகி நிற்கின்றன. பெண்களை ஏமாற்ற நினைக்கிற திமுகவிற்கு பெண்கள் வாக்கு போட மாட்டார்கள் என்பதை துணை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்ற மகளிர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் என்பது சேவை என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. ரத்த தானத்தில் சாதனை படைத்த நாங்கள், இந்த ஆண்டும் அதிக ரத்த தானம் அளித்து சாதனையை முறியடிப்போம்” என்று கூறினார்.
பிரதமரின் பிறந்த நாள் பரிசாக சட்டமன்றத்தில் பா.ஜ.க இரட்டை இலக்க எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.
துணை முதல்வரின் பிங்க் பஸ் குறித்த கருத்துக்கு பதிலளித்த அவர், “பெண்களை ஏமாற்ற முடியாது. பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகாது. பெரும்பாலான இடங்களில் பிங்க் பஸ்கள் வருவதில்லை, பாதியிலேயே நின்றுவிடுகின்றன. இதனால் திமுகவிற்கு பெண்கள் வாக்கு போடமாட்டார்கள்” என்றார்.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, “தேர்வை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் தடையை சந்திக்கின்றது திமுக அரசின் செயல்முறை. அரசே முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தடையில்லாமல் தேர்வுகளை நடத்த வேண்டும்” என்றும் விமர்சித்தார்.



Leave a Reply