பா.ஜ.க வின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா – விண்ணைப் பிளந்த பா.ஜ.க தொண்டர்களின் கரகோசம் !!!

Spread the love

கோவை, அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்த பா.ஜ.க தொண்டர்கள், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . விழா மேடைக்கு வந்த அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாரத் மாதா கி ஜெய், என்றும் வந்தே மாதரம் என்றும் கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்திய சக்கரவர்த்தி, நாம் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலை பார்த்தது இல்லை, ஆனால் இன்று இங்கு ஒரு இரும்பு மனிதரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இன்று மகா சிவராத்திரி கொண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில், மூன்று இடங்களில் நாம் இதுபோன்ற நடத்துகிறோம். இந்த மூன்று இடங்களிலுமே சிவன் வீற்றிருக்கக் கூடிய இடங்களாக உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 14 அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது, இன்று மேலும் மூன்று அலுவலகங்கள் திறக்கப்படுகிறது, அதை அமித்ஷா அவர்கள் திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறோம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை, ராமநாதபுரம், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் பா.ஜ.க அலுவலகம் திறக்கப்படுகிறது. ஒரு கட்சியின் அடிப்படை, அந்தக் கட்சிகளுக்கு அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்பது, அதை அமித்ஷா அவர்கள் தேசிய தலைவராக இருக்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூட, மாவட்ட அலுவலகங்கள் கொடுப்போம் என்று கூறினார். அப்படி கூறிய அமித்ஷா அவர்களே கோவையில் கட்டப்பட்டு உள்ள அலுவலகத்தை திறந்து வைக்க வந்து இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். பா.ஜ.க எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அதை எல்லாம் இன்று நரேந்திர மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்படும் என கூறியிருந்தோம் அதையும் செய்து காட்டி இருக்கிறோம், அதேபோல அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என கூறி இருந்தோம் அதையும் செய்து இருக்கிறோம். தேசத்திற்கு என்னவெல்லாம் சொல்கிறோமோ அதை அனைத்தையும் செய்வோம் என கூறினார்.

இதில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை

இரு துறைகளின் அமைச்சராக இருந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பவர் அமைச்சர் அமித்ஷா. இந்த அலுவலகத்திற்கு முன்பாக 2014 -ல் பாரதிய ஜனதா கட்சி ஒரு சிறிய அலுவலகத்தில் இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தை சொந்தமாக வழங்கி உதவி செய்த, பாபா பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமித்ஷா அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் பாரதிய ஜனதா அலுவலகம் இருக்க வேண்டும் என மனதில் நினைத்து இருந்தார். அந்த அலுவலகங்கள் ஒவ்வொரு பகுதிகளும் நம்முடைய கோவிலாக வீடாக இருக்க வேண்டும். அருகில் வசிக்கும் அனைவரும் அந்த கோவிலுக்கு வீட்டிற்கு உரிமையோடு வரவேண்டும். அப்படிப்பட்ட கட்டிடமாக அது இருக்க வேண்டும், மாவட்டத் தலைவர் அறையில் இருந்து எல்லோருக்கும் தேவையான அறைகள் அதில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொருவரும் படிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக லைப்ரரி அமைக்கப்பட்டு உள்ளது. நாம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம், அதனால் தான் நம் மீது அதிகமான கற்களையும் வீசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மக்கள் மனங்களில் தங்க ஆரம்பித்து விட்டது. அனைத்து இல்லங்களிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குடியிருக்கிறார். எதிர்க்கட்சி நண்பர்கள், பாரதிய ஜனதாவால் மக்களிடம் போக முடியவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்களின் எந்த திட்டமும் மக்களிடம் சென்று சேரவில்லை. பாரதப்பிரதமர் கஷ்டப்பட்டு யோசித்து நடுத்தர மக்களுக்கு வாங்கக் கூடிய மருந்து விலையை கூட குறைவாக இருக்க வேண்டும் என பிரதம மந்திரி மருந்தகத்தை தொடங்கினார். ஆனால் இங்கு இருக்கக் கூடிய முதல்வர் ஸ்டாலின் அந்த மருந்தகங்களுக்கு அனுமதி கூட கொடுக்கவில்லை, அப்படி வந்தால் அதற்கு தடையும் போட்டு விடுவார். ஆனால் நேற்றைய தினம் முதலமைச்சர் மருந்தகம் என்று காப்பி அடித்து அதே மருந்தகத்தை தமிழகத்தில் கொண்டு வந்து இருக்கிறார். நாங்கள் செய்தால் அது குற்றம் , ஆனால் அந்தத் திட்டத்திற்கு பெயரை மாற்றி நீங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள். ஆனால் அதையும் கூட நாங்கள் எப்படியாவது மக்களிடம் திட்டம் சேர்ந்தால் சரிதான் என்று கருதுகிறோம். பிரதமர் எப்பொழுதும் அவர் பெயரைக் கூட நரேந்திர மோடி மக்கள் மருந்தகம் என்று போட்டது இல்லை. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து தலைவர்களின் பெயரை வைக்காமல், பாரத பிரதமர் திட்டம் என்று கொண்டு வந்தார், அதற்குப் பிறகு தான் தமிழகத்தில் அண்ணா பெயர் எல்லாம் குறைந்து முதலமைச்சர் என்ற பெயர் சிறிய அளவில் தென்படுகிறது. இதுதான் பாரதப் பிரதமர் இந்தியாவில் ஏற்படுத்து இருக்கும் மிகப்பெரிய அரசியல் புரட்சி. தமிழகத்தில் கலைஞர் நூலகம் என பெயர் வைப்பவர்கள், மருந்தகத்திற்கு முதலமைச்சர் மருந்தகம் என பெயர் வைத்து இருப்பதிலேயே நாம் ஜெயித்து விட்டோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதனால் நாம் கடுமையாக பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. அதே போல தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான். அந்தக் கைதை கூட நாங்கள் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்கிறோம். பாரதியார் ஜனதா தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 இல் வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். முதலமைச்சர் பட்டப் பகலில் நாம் ஹிந்தியை திணிப்பதாக கபட நாடகம் போடுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மூன்றாவது முறையாக காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றி இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, என எங்கு சென்றாலும் பிரதமர் தமிழ் மொழி குறித்து ஏதாவது செய்து கொண்டு தான் இருக்கிறார். அவ்வளவு தமிழ் மொழியை நேசிக்க கூடிய பிரதமர் நமக்கு இருக்கிறார். நவம்பர் 12, 2022 ல் அமித்ஷா அவர்கள் சென்னையில் ஸ்டாலினுக்கு ஒரு அறிவுரை கொடுத்தார், மருத்துவக் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இரண்டையும் உங்களுடைய சொந்த மொழியில் சொல்லிக் கொடுங்கள் என கூறினார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி ஹிந்தியை திணிப்பார். தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ சகோதர சகோதரிகள் சி.ஆர்.பி.எப் போன்ற பணிகளுக்கு செல்கிறார்கள், அதையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. அப்படி செல்லும் பணிகளுக்கான பரிச்சை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருந்தது, மத்திய அமைச்சர் அமித் ஷா பதவிக்கு வந்த பிறகு 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என கொண்டு வந்தார். அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி ஹிந்தியை திணிப்பார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சரும் உண்மையில் தாய் மொழியை தான் திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். அமித்ஷா அவர்களுக்கு 133 திருக்குறள் அதிகாரம் பொறிக்கப்பட்ட பொன்னாடையை தான் இன்று வழங்கினோம். 247 எழுத்துக்களால் வரையப்பட்ட ஓவியம் கொடுக்கப்பட இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சி தமிழை வளர்க்கும் தமிழோடு இருக்கும் என்பதற்கு, கடை கோடி தொண்டனிலிருந்து பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு தொண்டனும் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஏனென்றால் உங்களுடைய ஆட்சியில் தமிழ் கெட்டுவிட்டது. தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கு சென்று விட்டார்கள். முதல்வர் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும் சொந்த பள்ளியில் ஹிந்தி திணிக்கப்படுகிறது. இது மக்களுக்கு தெரிந்தவுடன் முதலமைச்சர் அடுத்ததாக தொகுதி மறு சீரமைப்பு என்ற பிரச்சனையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். 2026 இல் தி.மு.க என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி, ஒரு மனிதன் எந்த வேலையும் இல்லை என்றால் அந்த சமயத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவான் என்பதற்கு உதாரணமாக, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கிறார். டெல்லியில் கூட அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார், மோடி ஜெயிக்க வேண்டும் என்றால் இன்னொரு ஜென்மம் எடுத்து வர வேண்டும் எனக் கூறினார். ஆட்சியில் இருந்து கீழே விழுவது அவ்வளவு பெரிய அடியாக இருக்கும், அதுபோல தான் இங்கும் நடக்கப் போகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுவிட்டார், மம்தா பானர்ஜியும் ஸ்டாலின் ஆகிய உங்களோடு சேர்ந்து 2026 இல் நிச்சயம் வீட்டிற்கு சென்று விடுவார். மோடி வந்ததற்கு பிறகு தமிழகத்தில் வெற்றி கண்ணுக்கு தெரிகிறது. அதனால் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும் என கூறினார்.சிவராத்திரி நாளிலே எல்லாம் வல்ல சிவன் அருள் நம் பக்கம் இருக்கும் என கூறினார்.