பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கியுள்ளதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சில காலமாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் கருத்து மோதல் நிலவி வந்தது. அன்புமணி கட்சியை கைப்பற்ற முயன்றதாக குற்றஞ்சாட்டிய ராமதாஸ், அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தானே தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் இருவரும் தனித்தனியாக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கட்சிக்கும், நிறுவனத் தலைவருக்கும் எதிராக செயல்பட்டது, சட்டவிரோதமாக தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்டியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் அன்புமணிக்கு சுமத்தப்பட்டன. இதுகுறித்து ஆகஸ்ட் 31க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை.
பின்னர் மீண்டும் 10 நாள் அவகாசத்துடன் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கும் அன்புமணி எந்த விளக்கமும் தரவில்லை.
இந்நிலையில், அன்புமணி எந்த பதிலும் அளிக்காததால், பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்குவதாக ராமதாஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மேலும், பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்றும் எச்சரித்தார்.



Leave a Reply