விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கியமான கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நான் மருத்துவமனையில் இருந்தபோது, கட்சி, மத, ஜாதி, பேதமின்றி அனைவரும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். மருத்துவர்கள் எனது உடல் நலம் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். நான் ஐசியூவில் இல்லை; சாதாரண பிரிவில் சிகிச்சை பெற்றேன்.”
அவர் மேலும் கூறினார்:
“அன்புமணி கூறிய பேச்சுகள் தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ‘ஜயாவுக்கு ஏதாவது ஆச்சினா நான் தொலைச்சி விடுவேன்’ என்ற பேச்சு ஒரு தலைவருக்கேற்ப அல்ல. இதுபோன்ற வார்த்தைகளை ஒரு சாதாரண மேய்ப்பவனும் பேச மாட்டான். அதற்காக தான் நான் ‘அவருக்கு தலைமை பண்பு இல்லை’ என்றேன்.”
“பாமக கட்சி, கொடி, பெயர் ஆகியவற்றுடன் இனிமேல் அன்புமணிக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஒழுங்கு நடவடிக்கை குழுவால் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இனி கட்சி பெயரைப் பயன்படுத்த கூடாது.”
அவர் மேலும் கூறினார்:
“அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். 46 ஆண்டுகள் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்த கட்சியை ஒருவர் தனியாக ‘என் கட்சி’ என்று சொல்வது நியாயமல்ல. தந்தை, தாயை காப்பாற்ற முடியாதவர் தமிழகத்தை எப்படி காப்பாற்றப் போகிறார் என்பது கேள்விக்குறி.”
இவ்வாறு கூறிய ராமதாஸ், பாமக-அன்புமணி உறவில் ஏற்பட்ட பிளவை வெளிப்படையாக உறுதி செய்துள்ளார்.



Leave a Reply