பாஜக நுழையும் மாநிலம் ஜனநாயகத்திற்கு ஆபத்து – மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு

Spread the love

மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை எதிர்த்து கோவை டவுன்ஹால் பகுதியில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இயக்கத்தை துவக்கி வைத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “வாக்கு திருட்டு ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. வாக்குகளை அபகரித்தவர்கள் பதவி விலக வேண்டும் என்பதற்காக இரண்டு கோடி கையெழுத்துகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். குறைந்தபட்சம் ஒரு கோடி கையெழுத்துகளை நிச்சயமாக பெறுவோம். பின்னர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம்,” என்றார்.

அதிமுக-பாஜக தொடர்புகளை கடுமையாக விமர்சித்த அவர், “அதிமுகவின் உரிமையாளர் எடப்பாடி பழனிசாமி போலத் தெரிந்தாலும், பஞ்சாயத்து செய்வது அமித்ஷா. இதுதான் ஹரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக செய்தது; இப்போது தமிழகத்திலும் அதே நிலை. பாஜக நுழையும் இடமெல்லாம் ஜனநாயகம் ஆமை புகுந்த வீடாக மாறுகிறது,” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், பாமக அலுவலகம் தொடர்பான பிரச்சினையை குறிப்பிட்ட அவர், “தேனாம்பேட்டையில் இருந்த அலுவலகத்தை திலகர் நகருக்கு மாற்றியது தேர்தல் ஆணையம் விசாரிக்காமல் செய்திருப்பது ஜனநாயக படுகொலை. பாஜக பாமகவை பிளவுபடுத்தி விட்டது,” என்றார்.

அதேபோல் நீட், ஜிஎஸ்டி, உதய்திட்டம் ஆகியவற்றை ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அனுமதிக்கவில்லை எனவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அவற்றை ஏற்றுக்கொண்டது எனவும் அவர் குறை கூறினார்.

இந்தியா கூட்டணியுடனான தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “எங்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அகில இந்திய தலைமைதான் வழங்கும். தற்போது இந்தியா கூட்டணியுடன் வலிமையாக பயணிக்கிறோம்,” என அவர் விளக்கமளித்தார்.

தமிழக வெற்றிக்கழகம் குறித்து கேட்டபோது, “ஒவ்வொரு கட்சிக்கும் எழுச்சி இருக்கும். தேர்தலில் மக்களின் தீர்ப்பே முக்கியம்,” என அவர் தெரிவித்தார்.