பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கோவை வருகை – நயினார் நாகேந்திரன் பேச்சு

Spread the love
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் நாளை கோயம்புத்தூர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கோவையில் உள்ள கோவில்களில் தரிசனம் மேற்கொள்கிறார்.

தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து எடுத்துரைக்கப்படும் மையக்குழு கூட்டத்திலும் நிதின் நபின் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றும், கேட்டதுமில்லை என்றும் அவர் கூறினார்.

சென்சார் போர்டை பாஜக பயன்படுத்துவதாக கூறப்படுவது முழுமையாக தவறு என அவர் விளக்கினார். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தனித்தனி அமைப்புகள். அவற்றுக்கும் பாஜகக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

சென்சார் போர்டுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஜனநாயகன்’ படத்தை குறித்து சென்சார் போர்டு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திரைப்படங்களில் காட்டக்கூடியது, காட்டக்கூடாதது என விதிமுறைகள் உள்ளன. அதனை சரி அல்லது தவறு என பாஜக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக வரவேண்டும் என விருப்பம் இருப்பதாகவும், ஆனால் முடிவு அவர்களது கையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இன்றைய காலத்தில் பொதுமக்கள் அனைத்து மொழிகளையும் படிக்க முனைகிறார்கள். “பராசக்தி” படம் வெளியான பின் அதில் உள்ள கருத்துக்கள் தெரிய வந்தது போல இன்றும் நிலைமை காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக சார்பில் களத்தில் இறங்குபவர்கள் குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். எங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார்.

‘ஜனநாயகம்’ படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேசுவது, காங்கிரஸ் விஜயை நோக்கி செல்கிறதைக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசி சுமுகமான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். பாமக மூத்த தலைவர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த முடிவு அவரிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியை ராமதாஸ் பாராட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. தேர்தலுக்கு முன் கூறிய 532 வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பழைய ஓய்வூதியம் குறித்து பொய் வாக்குறுதிகள் வழங்கி வருகின்றனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்யவில்லை. இப்போது ஜூன் மாதத்தில் வழங்குவோம் என தெரிவிக்கின்றனர். ஆனால் அப்போது திமுக ஆட்சியில் இருக்காது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் தினகரனை இணைப்பது குறித்து முடிவு எடுப்பது எடப்பாடி பழனிச்சாமியின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

பாஜக யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய செயலில் கட்சி ஈடுபடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.