இந்தியாவில் கல்வி துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகளில் கல்வி கட்டணங்களை யு.பி.ஐ. (UPI) உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளின் மூலம் வசூலிக்க மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் போன்ற அனைத்து தொகைகளையும் இனிமேல் பணமாக பெறாமல், யு.பி.ஐ., மொபைல் வாலட், நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறைகளின் மூலம் பெறுமாறு மாநில அரசுகள் மற்றும் கல்வித்துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அறிமுகமானால், பள்ளி கட்டண வசூலில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கை நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து, ஊழல் தடுப்பு மற்றும் கணக்கீட்டில் நேர்மையை உறுதி செய்யும் முக்கியமான மாற்றமாக அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Leave a Reply