பல்லடம் புறவழிச் சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு: விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்படும் என மனு அளிப்பு

Spread the love

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திட்டமாக NH-81 பல்லடம் புறவழிச் சாலை அமைக்கும் வேலைகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் வட்டத்திற்குட்பட்ட ஐந்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நேரில் சென்று மனு அளித்தனர்.

செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பல்லடம், நாரணாபுரம் மற்றும் மதப்பூர் ஆகிய கிராமங்கள் வழியாக 1.8 கிலோமீட்டர் தூரம் புதிய புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கோழிப் பண்ணைகள், நீர்வளங்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதைக் காரணமாகக் காட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

முன்னதாக கிராம மக்கள் தங்கள் பாதைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி வலியுறுத்தி வந்தனர். 70 மீட்டர் அகலமுள்ள சாலை திட்டம் அமலாக்கப்படின் 36 கிணறுகள், 8 கோழிப் பண்ணைகள், விவசாய நிலங்கள், தொழில் நிறுவனங்கள், கோவில்கள், சுடுகாடு உள்ளிட்டவை அழிக்கப்படும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிய திட்டம் இயற்கையாகவும் சமூக ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 2021-இல் மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட பழைய திட்டப் பாதையைப் பயன்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மக்கள் மற்றும் விவசாயிகளுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, “உங்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்படும்” என தெரிவித்தனர்.

இருப்பினும், திட்டம் நடப்பாகும் சூழ்நிலையில் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, “எங்கள் உயிரை கொடுத்தாவது இந்த திட்டத்தை தடுக்கப்போகிறோம்” என்ற உறுதியுடன் கருத்துத் தெரிவித்தனர்.

மக்களின் கோரிக்கை:
புறவழிச் சாலையை, தற்போது திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என்றே மக்களின் ஒருமித்த கோரிக்கை உள்ளது.