பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி- அண்ணாமலை கண்டனம்……..

Spread the love

திருநெல்வேலி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்   தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், 650 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர். தங்களுக்கான பட்டத்தை கையில் வைத்துக்கொண்டு மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் கவர்னரிடம் அதைக் காண்பித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, ஆராய்ச்சிக்காக பட்டம் பெற வந்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன்   ஜோசப் என்ற மாணவி, கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டத்தை காட்டி வாழ்த்து பெறாமல் துணை வேந்தர் சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்றுவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றார்.

இதனால், கவர்னர் ஆர்.என்.ரவி மட்டுமின்றி  விழா மேடையில் இருந்தவர்களும், பட்டம் பெற வந்த மாணவ-மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி ஜீன் ஜோசப்  “கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.  இதனால், பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை​, “காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.​” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.