நேபாளத்தின் புதிய பிரதமர் யார்? கர்நாடகாவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

Spread the love

 

நேபாளத்தில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும், பொருளாதாரத்தில் நேபாளம் சந்திக்கும் பின்னடைவு குறித்தும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அவர்களின் வாரிசுகளும் வாழும் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் ஜெனரேஷன் இசட் எனும் இளந்தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

இது அரசுக்கு எதிரான பிரச்சாரம் என்று சொல்லி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை முடக்கியது நேபாள அரசு. ஜெனரேசன் இசட் தலைமுறையினர் இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்களை ஒடுக்க நினைத்து அரசு தோற்றுப்போனது. அது மக்கள் புரட்சியாக நாடு முழுவதும் வெடித்தது. அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், முன்னாள் பிரதமர் ஷெர் பததூர் தேவ்பாவையும் அடித்து உதைத்தனர். நேபாளத்தின் நிதி அமைச்சர் விஷ்ணு பவுடாலை நடுரோட்டில் ஓட ஓட விரட்ட்டி அடித்து உடைத்துள்ளனர்.

போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு அதிபர், பிரதமர் மாளிகைகளுக்கு தீ வைத்தனர். நாடாளுமன்றமும் இதில் தப்பவில்லை. இதனால் ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் பிரதமர் சர்மா ஒலி. நாட்டின் நிலைமையை உணர்ந்து அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து புதிய பிரதமராக பாலேந்திர ஷா என்பவர் பதவியேற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று தெரிகிறது. யார் இந்த பாலேந்திர ஷா? என்று பார்க்கலாம்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 1990ல் பிறந்தவர் பாலேந்திர ஷா. எம்.டெக். பட்டதாரி. நேபாளத்தில் சிவில் இன் ஜினியரிங் படித்துவிட்டு, இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெல்காமில் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை படித்தார். பொறியல் பட்டதாரி என்றாலும் பாலேந்திர ஷா, ’ராப்’ பாடகராகவே அறியப்பட்டார். அதுவும் ஊழல் மற்றும் சமூக சமத்துவமின்மை பிரச்சனைகளுக்காக பாடல்கள் இயற்றி பாடினார். இதனால் இவர் மீது ஜெரேசன் இசட் தலைமுறையினரால் அதிகம் ஈர்க்கப்பட்டார். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று ஊழலுக்கு எதிராகவும் சமூகத்தின் குரலாகவும் ஒலித்து வந்தார்.

ஜெனரேஷன் இசட் தலைமுறையினரின் வேண்டுகோளை ஏற்று அரசியலிலும் இறங்கி கடந்த 2022ல் காதமண்டு நகர மேயர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். மேயராக இருந்து கொண்டே பிரதமர் சர்மா ஒலி ஆட்சியின் முறைகேடுகளை கடுமையாக சாடி வந்தார். கடந்த ஆண்டில் காத்மாண்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு 4 மாத சம்பள பாக்கி விவகாரத்தில் சர்மால் ஒலிக்கும் பாலேந்திர ஷாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை வித்ததைக் கண்டித்து முதலில் குரல் எழுப்பினார் பாலேந்திர ஷா. இதனால் , இவர் மீது ஜெனரெஷன் இசட் தலைமுறையினருக்கு ஈர்ப்பு அதிகமானது. தற்போத, நேபாளத்தில் நிலவும் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் பாலேந்திர ஷா. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலகியதுமே எக்ஸ் தளம் மூலமாக பாலேந்திர ஷாவை ‘’தலைமையேற்க வா!’’ என்று பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.