நெல்லை கல்லூரியில் எலிக்காய்ச்சல்: 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – கல்லூரியை மூட உத்தரவு

Spread the love

நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதாரத்துறை திடியூர் பகுதியில் செயல்படும் ஐந்து கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டதில், வெள்ளநீர் கால்வாயில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து பயன்படுத்தியதுதான் காய்ச்சலுக்கு காரணம் என கண்டறியப்பட்டது. குறிப்பாக, கல்லூரி வளாகத்தில் விலங்கு மற்றும் எலிகளின் ரத்தம், சிறுநீர் போன்றவை கலந்ததால் தொற்று ஏற்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கொல்கலன்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும், சமையல் அறை மற்றும் மெஸ் வசதிகளை புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள் வழங்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வருக்கு தமிழக பொது சுகாதாரச் சட்டத்தின் ஆறு பிரிவுகள் அடிப்படையாகக் கொண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளை பின்பற்ற தவறினால், உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்புதல் பிரிவின் கீழ் நீதிமன்ற மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.