,

நீங்கள் தான் எங்கள் அரசின் தூதுவர்கள் – கோவை மக்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

udhayanithi stalin
Spread the love
கோவை சரவணவம்பட்டி பகுதியில் மிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் அடிக்கடி செல்கின்ற ஊர் என்றால் அது கோவை தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்ந்த ஊரும் இதுதான். மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் எனது வீட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிலும் அதிகமாக உபயோகிக்கிறோம். இந்த திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் தந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழில் கல்வி சுகாதாரம் நகர உட்கட்டமைப்பு என்ற அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு ஒரு மாடல் அரசாக திகழ்ந்து வருகிறது. இதனைத் தான் நாம் திராவிட மாடல் என்று அழைத்து வருகிறோம். நம்முடைய திட்டங்களை பார்ப்பதற்காக இதர மாநிலங்களில் இருந்து அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் ஒன்றிய அரசிற்கு நாம் கொடுத்து இருக்கக்கூடிய வரி 6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அவர்கள் நமக்கு வெறும் 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி தான் திருப்பி தருகிறார்கள். அதாவது 1 ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து திருப்பி தரப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதம் மிக மிக முக்கியமான காலம். இது உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த முறை சிறு சிறு தவறுகள் நடந்திருந்தாலும் அதனை சரி செய்ய வேண்டும்.  மக்களாகிய  நீங்கள் தான் எங்கள் அரசின் தூதுவர்கள் முதலமைச்சரின் முகம். ” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த சிறந்த விளையாட்டு துறை மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  கே.என்.நேரு, வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.