கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தார்.
“2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வயோமித்ரா எனப்படும் எந்திர மனிதரை ஏற்றிச் செல்லும் ஆளில்லா விண் ஏவூர்தி அனுப்பப்பட உள்ளது. இதற்குப் பிறகு மேலும் இரண்டு ஆளில்லா ராக்கெட்கள் செலுத்தப்படவுள்ளன. இறுதியாக 2027 மார்ச் மாதத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் பங்கேற்கும் மனிதர் பயணம் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன என்றும், “மனிதர்களை அனுப்புவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டால் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வரும் தொழில்நுட்பங்கள் சோதிக்கப்படுகின்றன,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இது ஐஎஸ்ஆர்ஓவின் முயற்சியாக மட்டுமல்ல. விமானப்படை, கடற்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பங்களிப்பும் உள்ளது. உலகளவில் 9 முக்கிய இடங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நிலா மற்றும் செவ்வாய் ஆராய்ச்சிகளில் இந்தியா சாதனை படைத்துள்ளது. குறிப்பாக நிலவில் பயன்படுத்தப்படும் சிறந்த கேமரா எங்கள் நாட்டின் தயாரிப்பாகும்,” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
விண்வெளி ஆராய்ச்சியில் பொதுமக்களின் பங்கும் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், “நாட்டில் வரும் விண்வெளி திட்டங்களில் 55% பாமர மக்களின் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்,” என்றார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய நாராயணன், “வயோமித்ரா தானும் AI டெக்னாலஜியிலேயே உருவாக்கப்பட்டது. வரவிருக்கும் சந்திராயன்–4 திட்டத்தில் நிலா மாதிரிகளை திரும்பக் கொண்டு வருவதற்கும் AI ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்,” எனத் தெரிவித்தார்.



Leave a Reply