அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு தான் பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை என்றும் ஊடகங்கள் தான் அதனை தவறாக புரிந்து கொண்டனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (அக்டோபர் 23) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விரைவில் நல்லது நடக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடக்குமா என்ற கேள்விக்கு , இதுவரை அப்படி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை..பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன் . ஆனால் ஊடகத்தினர் தான் தவறாக புரிந்து கொண்டனர் என தெரிவித்தார்.
ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த அதிமுக கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு , அது உங்கள் கருத்து என பதிலளித்த செங்கோட்டையன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான அமைதி காத்து வந்த செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அதிமுகவில் தனது செயல்பாடுகள் குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான விமர்சனத்தையும் வெளிப்படையாக முன் வைத்தார். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது குறித்து 10 நாட்களுக்குள் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply