நயந்தாரா வந்தால் கூட கூட்டம் வரும்- விஜயை தாக்கிய சீமான்

Spread the love

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இளையராஜாவின் தந்தைக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதில் பெருமை இருப்பதாகவும், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்தால் இசைத்துறையில் இளையராஜாவை விட பெரிய சாதனையாளர் இல்லை என்றும் தெரிவித்தார். அதேசமயம் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கிய மரியாதையை வ.உ. சிதம்பரனார் மற்றும் பாரதியாருக்கு தராதது வருத்தமாக உள்ளதாகவும், சச்சினை விட பாரதியார், சிதம்பரனார் இழிவாகிவிட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.

இளையராஜாவை தாம் இசையமைப்பாளராக அல்ல, இசை இறைவனாகவே பார்க்கிறோம் என்றும், அவரின் பெயரில் விருது வழங்கப்படுவது பெருமை எனவும் கூறினார். முதலில் அவருக்கு தாம் பாராட்டு விழா நடத்த முயன்றதாகவும், ஆனால் அரசு செய்ததால் அதில் தாம் இடையூறு செய்யவில்லை என்றும் விளக்கினார். மேலும் பாரதிராஜா போன்ற கலைஞர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திருச்சியில் விஜயின் பிரச்சார கூட்டம் குறித்த கேள்விக்கு, திரையில் பார்த்த நடிகர்கள் வரும்போது கூட்டம் இயல்பாக வரும். அதுபோல தாங்களும் சிறு வயதில் எம்ஜிஆரைப் பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்தோம், வராமல் போனதால் ஏமாந்தோம் என்றும் நினைவுபடுத்தினார். என் சகோதரர் அஜித், ரஜினி, நயன்தாரா வந்தாலும் கூட்டம் வரும். ஆனால் கூட்டத்தை விட கொள்கைகளையே பாருங்கள் என வலியுறுத்தினார்.

மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்று கூறிய அவர், மலைகளை காக்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். இன்றைய எச்சரிக்கைகள் உடனடியாக புரியாது, பாதிப்பு ஏற்பட்ட பிறகு தான் மக்கள் உணர்வார்கள் எனவும் கூறினார். இலங்கை, நேபாளத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டதை நினைவுபடுத்தி, நமக்குக் கிடைக்காது என்று யார் உறுதி கூற முடியும் என கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வீடு கட்ட நினைக்கிறீர்கள், நான் என் குழந்தைகளுக்கு வாழும் நாடு விட வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் பணம் சேர்க்க நினைக்கிறீர்கள், நான் சுவாசம் சேர்க்க நினைக்கிறேன்,” என சீமான் வலியுறுத்தினார். கனிம வள கொள்ளையைத் தடுக்க ஒரே வழி தன்னைக் அதிகாரத்தில் அமர்த்துவதே எனவும் தெரிவித்தார்.

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் குறித்து கேட்டபோது, “பெற்றோர்களை குடிக்க வைத்துக் கொன்ற அரசே காரணம்” என சாடினார்.

டெட் தேர்வு குறித்து, “டெட் தேர்வுக்கே ஒரு ‘டெட்’ போட வேண்டும். படித்து ஆசிரியராக ஆனவர்களிடம் மீண்டும் தேர்வு கேட்கிறார்கள். கேட்பவர்கள் எந்தத் தேர்வு எழுதியுள்ளனர்?” என்று கேள்வி எழுப்பினார். படிக்காதவர்கள்தான் இன்று செய்தியாகிறார்கள் எனவும், அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வைத்தால் நாட்டில் பிரதமர், முதல்வர் எவரும் இருக்கமாட்டார்கள் என நகைச்சுவையாக கூறினார்.

கர்நாடகாவில் சாதி கணக்கெடுப்பு நடப்பதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் அது சாத்தியம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

விஜயலட்சுமி வழக்கில் மன்னிப்பு கேட்க நீதிமன்றம் கூறியது தொடர்பாக, “அப்படி எதுவும் இல்லை. தீர்ப்பை காட்ட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

நீட், டெட், வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சாடிய அவர், “வட மாநிலங்களில் புத்தகம் விரித்து வைத்து தேர்வு எழுதுகிறார்கள். அது போலியான மருத்துவரை உருவாக்குமா? தகுதியானவரை உருவாக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். நமக்கு விரும்பிய கல்வியை கற்க முடியாத நிலை கொடுமை என்றும் கூறினார்.

அணு உலை, மின் கட்டணம், சொத்து வரி, ஓய்வூதியப் பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, இந்தி திணிப்பு, கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளை காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக எல்லோரும் உண்டாக்கியதாக சாடினார். சாராயக் கடையை மூடுவோம் என்று யாராலும் சொல்ல முடியாது என்றும் சவால்விட்டார்.

“பிரபாகரன்தான் மூன்றாவது உலகப் போரை நடத்தினார். இனி நடந்தால் அது நான்காவது உலகப் போர் தான்,” எனவும், “என்னை ஓட்டு போட்டால் அதிகாரம் வரும். கேள்வி கேட்டு கொண்டே இருந்தால் வராது” எனவும் கூறினார்.

பிரதமர் மணிப்பூருக்கு தாமதமாக சென்றதையும், அருணாச்சல பிரதேசத்துக்குச் சென்று ஓட்டு கேட்பாரா எனவும் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் செய்வது போல இலங்கை விவகாரத்திலும் செயல்பட வேண்டியதுதான் என தெரிவித்தார்.

விமான நிலைய விரிவாக்கம் குறித்து, “பசி எடுத்தால் விமான நிலையத்தை இடித்து விவசாயம் செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

2026 தேர்தலில் தான் முக்கிய பங்கு வகிப்பேன் எனவும், “இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் பேப்பர் பார்த்துதான் பேசுகிறார்கள். மழை வந்தால் அதை வைத்து எப்படி பேசுவார்கள்?” என கிண்டலிட்டார்.

இறுதியாக, விஜயின் கூட்டம் குறித்த கேள்விக்கு, “அவரைப் போல நானும் I am waiting என்கிறேன். மே மாதத்தில் தெரிந்து விடும்” என சீமான் பதிலளித்தார்.