நடிகர் கமல்ஹாசனுக்கு 305 கோடி சொத்து ; 50 கோடி கடன்

kamalhassan
Spread the love

 

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் நேற்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களை பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மனுவில் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் 4 வணிகக் கட்டிடங்களை அவர் வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும் கமலுக்கு உள்ளது. மேலும், கமல்ஹாசன் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., லக்சஸ் ஆகிய 4 கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த சொத்து மதிப்பு ரூ.305.55 கோடி என்று கமல் குறிப்பிட்டுள்ளார். கமலின் வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது .