அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கம் போல் அல்லாடிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனால் தனிக்கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.
பழனிசாமிக்கும் பாஜகவுக்கும் இடையே மாட்டிக்கொண்டு, ஒரு கட்டத்தில் இரு தரப்புமே கைவிட்ட நிலையில் நடுவில் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார் பன்னீர்செல்வம்.
அமமுக என்று தனிக்கட்சி கைவசம் இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் அல்லது தவெகவில் இணையலாம் என்ற வாய்ப்புகள் டிடிவி தினகரனுக்கு இருக்கின்றன. அப்படி ஒரு வாய்ப்பு தனக்கில்லாததால் தனிக்கட்சி தொடங்கியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தார் பன்னீர்செல்வம்.
இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி அன்று மதுரையில் மாநாடு நடத்துவது என்று முடிவெடுத்தார். இதற்கிடையில் செங்கோட்டையன் முன்வந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் சென்றதால் மாநாடு முடிவை கைவிட்டார் பன்னீர்செல்வம். செங்கோட்டையனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து அவரும் தவெக பக்கம் சென்றுவிட்டதால் திரிசங்கு சொர்க்கத்திலேயே அல்லாடிக் கொண்டிருந்தார் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் செங்கோட்டையன் மூலமாக தவெகவில் இணைய பன்னீர்செல்வத்திற்கு அழுத்தம் தரப்பட்டு வந்தது. இதை அறிந்த அமித்ஷா, பன்னீர்செல்வமும் தவெக சென்றுவிட்டால் அதிமுக ரொம்பவே பலவீனமாகிவிடும். அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதகமாக போய்விடும் என்பதை உணர்ந்து பன்னீர்செல்வத்தை டெல்லியில் அனுப்பி பேசி இருக்கிறார்.
தவெக பக்கம் வரச்சொல்லி செங்கோட்டையன் அழுத்தம் கொடுப்பதாக வந்த செய்திகளையும் அவர் மறுக்கிறார். ‘’செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த பிறகு நான் அவரிடம் பேசவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை’’என்கிறார்.
’’தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை எடுத்துச்சொன்னேன். அமித்ஷா கேட்டுக்கொண்டார்’’என்று பன்னீர்செல்வம் சொல்வதன் மூலமே அதிமுகவில் அமித்ஷா மூலம் ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது என்பது தெரிகிறது. பன்னீர்செல்வத்தின் பேச்சிலும் அந்த நம்பிக்கை தெரிகிறது.



Leave a Reply