தோனி சென்னையில் ஸ்போர்ட்ஸ் சென்டர் திறப்பு

Spread the love

கடந்த ஒரு வாரமாக சென்னையில் தனியார் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி, இன்று பாலவாக்கத்தில் ‘7Paddle’ என்ற தனது சொந்த ஸ்போர்ட்ஸ் சென்டரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத், சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் சென்டரில் 3 பேடில் கோர்ட்கள், ஒரு பிக்கிள் பால் கோர்ட், நீச்சல் குளம், ஜிம், நீராவிக் குளியல், கஃபே மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு உடலை இலகுவாக்கும் சிறப்பு அறை போன்ற பல வசதிகள் உள்ளன.

திறப்பு விழாவில் பேசிய தோனி, “சென்னை எப்போதுமே எனக்கு ஒரு சிறப்பு இடம். கிரிக்கெட்டிலும், அதன் வெளியேயும் சென்னை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. எனவே, என் முதல் ஸ்போர்ட்ஸ் சென்டரை இங்கே துவங்குவது சரியான முடிவு என்று நினைக்கிறேன். பேடில் ஆட்டம் சுவாரஸ்யமானது, யாராலும் விளையாட முடியும். இது விளையாட்டு வீரர்களுக்கும் குடும்பங்களுக்கும் பிட்னஸ் ஆர்வலர்களுக்கும் சிறந்த இடமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.